ஆதரவாளர்கள்

Monday, April 2, 2012

இலவசங்கள் இழிவல்ல
சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. பிராந்தியக் கட்சிகள், அந்தந்த மாநிலத்தில், தேசியக் கட்சிகளை விட வலிமையுடையது போன்ற தோற்றத்தை, உருவாக்கிக் கொண்டுள்ளன. அவைகளின் நிலைப்பாடுகள், பெரும்பான்மையான மக்களின் மாறுபட்ட மனோபாவம் போன்றவை, நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஜனநாயக வேர் சரியாக ஊன்றவில்லை என்ற, ஐயப்பாட்டையே எழுப்புகிறது.
மாநிலக் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி, இனம், ஜாதி அடிப்படையில், இன்று பல்கிப் பெருகி, லெட்டர் பேடு கட்சிகளாகி, மக்களுக்குத் தொண்டாற்றுவதை விட, அவர்களைத் துண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆங்கிலேயே ஆட்சியரால் விளைந்த ஒரே நன்மை, இந்தியா இரண்டு பட்டாலும், ஒருங்கிணைந்த இந்தியாவாக, ஒரு நாடு உருவானது தான். காந்தி,நேரு, படேல், காமராஜர் போன்ற, நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெரும் தலைவர்கள் எல்லாம், அரசியலில் சம தர்மத்தைக் கடைபிடித்து, இந்த நாட்டிற்குச் சுதந்திரமும் வாங்கிக் கொடுத்து, மக்களை, மக்களே ஆளும் ஜனநாயக அமைப்பையும் கொண்டு வந்தனர். ஆனால், காலப்போக்கில், அந்த நோக்கம் அடிப்பட்டு, இன்று அரசியல் சாக்கடையாகி, சந்தைக்கடைச் சரக்காகி, மலிவு வியாபாரத்தலமாகி விட்டது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை அமைப்பான, இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்.,) நிர்வாக முறையை, இந்தியன் நிர்வாக சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்.,) என்ற பெயரில், குறு நில மன்னர்கள் ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தினர்.

படிப்பறிவு இல்லாத மக்கள் மத்தியில், அவர்களுடைய தகுதியை மேம்படுத்தும் எவ்வித திட்டமும் இல்லாது, வயது வந்தவர்கள் ஓட்டு முறையைக் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில், பெருமக்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போட்டனர். போகப் போக, மொழிவாரி மற்றும் பிராந்திய உணர்வுகளைத் தூண்டிய, மாநிலக் கட்சிகளின் பிடியில் சிக்கினர். அதன்பின், மலிவான வாக்குறுதிகளுக்கும், கையூட்டுகளுக்கும் அடிமையாகி, தற்போதைய நிலையை நம் ஜனநாயகம் அடைந்துள்ளது. எனினும், நம் பாரம்பரிய கலாசாரம், வாழ்க்கை முறை, எந்த துன்பம் ஏற்படினும், "நாம் செய்த பாவம், நாம் அனுபவிக்கிறோம். நமக்கு கெடுதல் செய்த அவன், என்ன செய்வான்' என்ற மனோபாவம், நம்மை சுரண்டும் அரசியல்வாதிகளின் மேல், அதிகக் கோபப்படாமல் காப்பாற்றி வருகிறது. எனவே தான், அண்டை நாடுகளின், நித்திய கண்டம், பூரண ஆயுசு என்ற அரசியல் ஸ்திரமற்ற தன்மைகளில் இருந்து நாம் வேறுபடுகிறோம். அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் அல்லது அவர்களால் பதவியில் அமர்த்தப்பட்ட பொறியியல் வல்லுனர்கள் கொடுக்கும் திட்டத்தால், கிராமப் புறங்களில், கழிவு நீர்க்குட்டை என்றும், மழை நீர்ச் சேமிப்புத் திட்டம் என்றும், மக்களின் பணத்தை வீணடித்து வருகின்றனர்.

சீனாவில் பெரும் சுவர் போல், சாட்டிலைட் படங்களில், கண்மாய்களும், அதன் வரத்துக் கால்வாய்களும் அழகாகக் காட்சி அளித்தது போய், இன்று ஆங்காங்கே அவைகள் துண்டுபட்டுக் காட்சி அளிக்கின்றன. நம் நாட்டில் மழை குறைந்து விடவில்லை. ஆனால், மழை நீர் சேமிக்கும் அமைப்பு சீர்குலைந்து விட்டது. ஆண்டு ஒன்றுக்கு கடலில் வீணாகும் தண்ணீரைக் கொண்டு, இந்தியாவின் பரப்பளவை, ஆண்டு முழுவதும், இரண்டு அடி உயரமுள்ள தண்ணீரில் வைக்க முடியும் என்பது, நிலவியல் மற்றும் நீரியல் நிபுணர்களின் கணக்கு. ஆனால், நாளைய பிரதமர் என்று, மத்திய அரசால் கணிக்கப்படுபவரின் கணக்கே வேறு. நீர் மேலாண்மைக்காக, ஆறுகளை இணைக்கும் திட்டம் சாத்தியமில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால், இத்திட்டத்தால் சுற்றுப்புறச் சூழல் கெட்டுவிடும் என்ற அருள்வாக்கை உதிர்த்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாம் நமக்குத் நாமே தேடிக்கொண்ட அரசியல் அமைப்பு முறை, நமக்கு நாமே போட்டுக் கொண்ட முள் வேலி. நம் நாட்டு மக்களுக்கு ஏற்ற முறையை மாற்றி அமைத்துக் கொள்ள, தற்போதுள்ள அறிவு ஜீவிகளும், மற்ற அரசியல்வாதிகளும் தயாராக இல்லை. கூட்டணி அரசியல் முறை, நம் நாட்டில் வேரூன்றிய காலத்தில் இருந்து, கொள்கைக்கான கூட்டணி என்பது மாறி, கொள்ளைக்கான கூட்டணி என்று ஆகிவிட்டது.

நாட்டின் பெரும்பான்மையான சொத்து மற்றும் உற்பத்தி பொருட்கள், 36 கோடி மக்கள் வசம் சென்று விட்டது. 37 சதவீத மக்கள் ஒரு அமைப்பிலும், 20 ரூபாய் என்ற நாள் வருமானத்தில், கட்டுப்படாமல் உழன்று கொண்டிருக்கின்றனர். நாட்டுப்பற்று மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அரசியல் தலைவர்கள் மட்டுமே, மக்களின் பசி, உடல் நலம் மற்றும் கல்வி சம்பந்தமான நேர்மையான நடவடிக்கைகளை, ஜனநாயக நாட்டில் எடுக்க முடியும். ஆனால், பெரும்பான்மை மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையும், பட்ட கடனை அடைக்க வழியின்றி, உணவின்றி தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தைக் கண்டு கவலைப்படாமல், அவர்களின் அறியாமையையும், வறுமையையும் ஓட்டு வங்கியாக பாவித்து, பணம் கொடுத்து வாங்கி, உல்லாச வாழ்க்கை வாழும் அவல நிலையைத் தான், நம் நாட்டில் காண முடிகிறது.

அரசியல் தலைவர்கள் முழங்குவது போல், இன்று தெருவில் பிச்சை எடுப்பவரும், இந்நாட்டு மன்னன் தான். ஆனால், அவன் பெயர், "ஓட்டளிப்பவன்' என்ற அளவிலே தவிர, வேறு எந்த ஆவணத்திலும் காணப்படாது. இதுதான், நம் நாடு ஜனநாயக அமைப்பில் கடன் வாங்கிய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட அவல நிலை. ஊழல் அரசுகள் மற்றும் ஊழல் செய்யக் காத்துக் கிடக்கும் கொள்கைக் கோமான்கள், ஒருவேளை கஞ்சி இன்றி வாடும் மக்களுக்கு, தங்கள் வாய்ச் சொல் வீரத்தை, ஊடகங்கள் மூலம் பறைசாற்றி, நல்ல பொழுதுபோக்கை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில், நாணயமற்ற, ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை உருவாக்கும் சமூக அமைப்பில், இன்றைய தினம், இலவசங்கள் ஏற்கத்தக்கது தானா? வளர்ந்துவிட்ட இங்கிலாந்து நாட்டிலேயே, வயது முதிர்ந்தவர்களுக்கு இலவசம், வேலையற்றோருக்கு இலவசம், மருத்துவ வசதிகள் என, அனைவருக்கும் இலவசம் என்ற நிலை உள்ளது. அங்கு மக்கள் தொகையும் குறைவு, வளமும் குறைவு, சந்தையும் குறைவு என்றாலும், சாதாரணப் பணப்பரிவர்த்தனை எல்லாம், வங்கிகள் மூலம் நடப்பதால், அரசுக்கான வரி, வங்கிகளாலேயே கணக்கிடப்பட்டு, கஜானாக்களில் சேர்க்கப்பட்டு வருவதால், கள்ளப்பண வியாபாரம் பெருமளவில் கட்டுப்பாட்டில் உள்ளது. நம் நாட்டில், வரி வசூல் அமைப்புகள் சிதறிக்கிடப்பதால், கள்ளச் சந்தையும் அதிகம், கள்ளப் பணமும் அதிகம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் எண்ணிக்கையும் அதிகம். எந்தவிதத் தேவையும், இதையெல்லாம் மீறி அல்லவா கீழ்த்தட்டு மக்களை சென்றடைய வேண்டும்?

இன்றுள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட அரசியல் அமைப்பில், நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, உணவு, உடை, உறைவிடம் நிறைவு பெற இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை. காற்று எப்படி அனைவருக்கும் பொதுவானதோ, அதுபோல், நாட்டின் வளம் அனைவருக்கும் பொது. நம் நாட்டு, கடன் வாங்கிய அரசியல் அமைப்பு முறையில் பலம் பொருந்தியவன், அனைத்தையும் பெறத் தகுதியானவன். உழைக்கும் வர்க்கம், உழைத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்ற தாத்பரியத்தை, ஜனநாயகம் என்ற போர்வையில், நம்மிடம் திணிக்கப்பட்ட நடைமுறையில், நாற்றமடிக்கும் இவ்வளவு பிரமாண்டமான ஊழல்களுக்கு இடையில், ஏழைகளுக்கு இலவசங்கள் என்பதும் நியாயமே. எந்த அரசு அமைந்தாலும், கீழ்த்தட்டு மக்களுக்கு, அவர்கள் வாழ்க்கை வசதிக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அரசே, நல்லரசாக அமையும் என்றே கருதத் தோன்றுகிறது. email: manoshanmugam5@yahoo.co.in

முனைவர் கா.கா.சண்முகம், கனிமம் இணை இயக்குனர் (பணி நிறைவு)

No comments: