ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

அன்னா ஹசாரேவுக்கு பெரும் ஆதரவு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது



சென்னை : அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, சென்னையின் பல இடங்களில் நேற்று, போராட்டம் நடத்தப்பட்டது. திருவான்மியூரில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது.சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.திருவான்மியூர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, சென்னை திருவான்மியூரில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. மகாத்மா காந்தியின் செயலர் கல்யாணம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்த பாரதி ஆகியோர் துவக்கி வைத்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நலச் சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததால், பலர் உடல் சோர்வு ஏற்பட்டு, மயக்க நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.உண்ணாவிரதத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதால், போராட்டம் வலுவடைந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது
.திருவொற்றியூர்: வாய்ஸ் ஆப் இந்தியன், வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் மற்றும் வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு இணைந்து, திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிறுத்தத்திலிருந்து சூரியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், தேசியக்கொடி ஏந்தி, பெரியார் நகர், திருவொற்றியூர் மார்க்கெட் வழியாக தேரடி சென்றனர். அவர்களுடன் பொதுமக்களும் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
சைதாப்பேட்டை: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதவாக, சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை முன்பாக எக்ஸ்னோரா, ஆனந்தம், சோழநாடு ஆகிய அமைப்புகளின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது.இதில், எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சோழநாடு அமைப்பின் தலைவர் வைரசேகர், ஆனந்தம் அமைப்பின் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே, அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்தனர். பின்னர், ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.பயணிகள், கடைக்காரர்கள், பாதசாரிகள் அனைவரிடமும் சென்று, ஊழலுக்கு எதிராக கையெழுத்து வாங்கினர். நூற்றுக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு, அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.

1 கருத்து:

Srinivasan சொன்னது…

அருமை. இது போன்ற பதிவுகள் பல வர வேண்டும்.
www.arasan.info