ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிக்கு ஆப்பு : லஞ்சம் கேட்டு சிக்கினார்.
7:05 AM .... "அழியாச் சுடர்கள்" ராம்
ஆகஸ்ட் 6, 2009 கோவை: ஊழலை எதிர்க்கும் இயகத்தை நடத்தி வந்த நபர், பத்திரப் பதிவு அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு கையும் களவுமாக கைதாகியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயிலை சேர்ந்தவர் காந்தி. இவருக்கு 59 வயதாகிறது. மாவட்ட ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்க செயலாளராக உள்ளார்.
இவர், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராமச்சந்திரனை சந்தித்தார்.
சிறிது நேரத்தில் கோவை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சண்முகப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், ஞானசேகரன் ஆகியோர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்தனர். காந்தியைப் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
காந்தி ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராமச்சந்திரன் கூறுகையில்,
ஒரு மாதத்துக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகி என அறிமுகப்படுத்திக் கொண்டு காந்தி இங்கே வந்தார். உங்கள் கட்டுப்பாட்டில் 12 அலுவலகங்கள் உள்ளன. அங்கெல்லாம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தாமல் இருக்க வேண்டுமெனில் 12 அலுவலகத்துக்கும் சேர்த்து மாதம் ரூ.60 ஆயிரம் கொடுத்து விடுங்கள். லஞ்ச ஒழிப்பு போலீசாரை நான் சரி செய்துகொள்கிறேன் என்றார்.
எனக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் வாருங்கள் என கூறி அனுப்பி விட்டேன். அதன்படி நேற்று அவர் மீண்டும் வந்தார். நான் அவரிடம் பணத்தைக் கொடுத்தேன். லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கும் தகவல் கொடுத்தேன். போலீஸார் வந்து கைது செய்து சென்றனர்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி சண்முகப்பிரியா கூறுகையில், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுவதாகவும், சென்னையில் இருந்து வந்திருப்பதாகவும் கூறி பத்திரப்பதிவு அதிகாரியிடம் காந்தி பணம் கேட்டுள்ளார்.
அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் அவரை விசாரித்தோம். லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் போலீசாரிடம் அடையாள அட்டை உள்ளது. சோதனைக்கு செல்லும் இடங்களில் அடையாள அட்டை காட்டிய பிறகுதான் உள்ளே செல்வோம். அடையாள அட்டை இல்லாமல் யாராவது வந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறினால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
லஞ்சம் வாங்கி கைதான காந்தி பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகியே லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: tamilnadu, crime, bribe, anti corruption movemnent functionary, arrest, தமிழ்நாடு, குற்றம், ஊழல் எதிர்ப்பு இயக்கம், லஞ்சம், கைது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக