ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

அரசு விருப்புரிமையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான


சென்னை : "அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் அரசுக்கோ, வீட்டுவசதி வாரியத்துக்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சியிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: அரசு விருப்புரிமையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கற்பனையாகவும், வேண்டுமென்றே திசை திருப்பும் உள்நோக்கத்துடனும் சில நீதிபதிகள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு, செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது, தி.மு.க., ஆட்சியில் மட்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் செய்கின்றன. அரசு விருப்புரிமை ஒதுக்கீடு, கடந்த பல ஆண்டுகளாகவே, நடந்த எல்லா ஆட்சிகளிலும், வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொறுத்தவரை நடைமுறையில் இருந்து வரும் ஒன்று.


வீட்டுவசதி வாரிய வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவீத வீடுகள், விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 15 சதவீத வீடுகள் மற்றும் மனைகளை அரசு விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்கிறது. விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது போலவும், குலுக்கல் முறையில் விற்பவர்களிடம் பெறப்படும் தொகையை விட இது குறைவானது போலவும், வேண்டியவர்களுக்கு எல்லாம் அரசு இடத்தை இனாமாக வாரிக் கொடுத்துவிட்டதை போலவும், இப்பிரச்னையை திசை திருப்பும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.


வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகள் அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயிக்கும் போது, வாரியம் நடைமுறையில் கடைப்பிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயிக்கிறது. அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றோர், அந்த தொகை அதிகமாக உள்ளதாக கூறி, மனையையே திரும்ப ஒப்படைக்கிற நிலைமையும் உள்ளது. விருப்புரிமை ஒதுக்கீட்டால் அரசுக்கோ, வீட்டுவசதி வாரியத்துக்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், இதுபோல வாடகை வீடுகளே கூட விருப்புரிமை அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த சிலருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: