ஜூலை 05,2011,01:18 IST



லக்னோ:லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம் கன்னூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில். இவரது மனைவி மம்தா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மம்தாவை, பிரசவத்துக்காக, அவரது கணவர், கன்னூச் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.மருத்துவமனையிலிருந்த நர்சிடம் இதுகுறித்து, அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த நர்ஸ், "உங்கள் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், 1,500 ரூபாய், லஞ்சமாக தர வேண்டும்'என, கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த சுஷில்,"நான் ஏழை. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என் மனைவி, பிரசவ வலியில் துடிக்கிறாள். தயவு செய்து, அவளை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்'என, கெஞ்சினார். அங்கிருந்தவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு வெளியில், சாலையோர நடைபாதையில் நின்று கொண்டிருந்த மம்தாவுக்கு, வலி அதிகரித்தது. சிறிது நேரத்தில், நடைபாதையிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அருகில் இருந்தவர்கள், இதற்கு உதவினர்.இதன்பின், மீண்டும் மருத்துவமனைக்குள் சென்ற சுஷில்,"என் மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது. இனிமேலாவது, மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்'என, கேட்டார்.
ஆனால், 1,500 ரூபாய் தந்தால் மட்டுமே, சேர்த்துக் கொள்வோம்' என, மருத்துவமனையில் இருந்தவர்கள் உறுதியாக கூறி விட்டனர்.இதையடுத்து, எப்படியோ பணத்தை திரட்டிக் கொண்டு வந்து, மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கொடுத்தார், சுஷில். இதன் பின் தான், மருத்துவமனையில் மம்தாவை சிகிச்சைக்கு சேர்த்துக் கொண்டனர்.இந்த தகவல் வெளியானதும், கன்னூச் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த தகவலை, மருத்துவமனை நிர்வாகம், திட்டவட்டமாக மறுத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.