நண்பர்களே முடிந்தவர்கள் இதன் நகல் எடுத்து உங்கள் ஊர் மக்களை விழிப்படைய உதவுங்கள்
லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான மாறுதல்களை இது உண்டாக்கும்?
பொது வாழ்க்கையில் ஒன்றிரண்டு முக்கிய பயன்கள் -
1)அரசாங்க பொறுப்புகளில் இருக்கும் பெரிய மனிதர்கள் மீது (அமைச்சர்கள்,அரசு செயலாளர்கள்,உயர் போலீஸ்
அதிகாரிகள் போன்றோர் ) வழக்குத் தொடுக்க வேண்டுமானால் -
இது வரை – அரசிடம்அனுமதி பெற்ற பிறகு தான் செய்ய
முடியும். இந்த அனுமதி சாதாரணமாக கிடைப்பதில்லை. (2 ஜி ராஜா விஷயத்தில் இதற்காக 2 வருடங்கள் காத்திருந்து, பின்னர் சுப்ரீம் கோர்ட் வரை போய் போராட வேண்டி இருந்தது ).
லோக்பால் வந்து விட்டால் -
ஓரளவு ஆதாரங்கள் இருந்தாலே போதும்- அரசு அனுமதி இல்லாமலே யார் மீது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம்.
2)இப்போது புலன் விசாரணை செய்யும் அமைப்பான சிபிஐ யும், விஜிலன்ஸ் கமிஷனும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன. எனவே விசாரணையை இழுத்தடிக்கவும் முடிகிறது.
புகாருக்கு போதிய முகாந்திரம் இல்லைஎன்று சொல்லி வழக்கை முடிக்கவும் முடிகிறது.(உம் – குவாட்டரோச்சி )
மத்திய அரசு தனக்கு வேண்டாத நபர்களை பயமுறுத்தவோ, தனக்கு சாதகமாக செயல்பட வைக்கவோ முடிகிறது.
(உம் – லாலு பிரசாத், மாயாவதி, முலாயம் சிங், அமர் சிங், சிபு சோரன் )
லோக்பால் வந்து விட்டால் – இந்த இரண்டு அமைப்புகளும் – அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு,சுதந்திர அமைப்பான (தேர்தல் கமிஷன் போன்றது ) லோக்பால் கட்டுப்பாட்டில் வந்து விடும்.
லஞ்ச ஊழல் வழக்குகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக விசாரணை துவக்கப்பட்டு, ஒரு வருடத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு,அடுத்த ஒரு வருடத்திற்குள் விசாரணை
முடிவடைந்து தீர்ப்பு சொல்லப்பட்டாக வேண்டும். ஆக மொத்தம் எந்த வழக்காக இருந்தாலும் 2 வருடங்களுக்குள் தீர்ப்பு கிடைத்து விடும். அதற்குப் பிறகு ஒரு முறை மட்டுமே, அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் தான் மேல்முறையீடு அனுமதிக்கப்படும். மத்திய அரசு வலுவான லோக்பாலை கொண்டு வராமல் இழுத்தடிப்பதற்கு இவை முக்கியமான காரணங்கள். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன !மற்றபடி தனி மனிதனின் வாழ்வில் ஏற்படக்கூடிய விடியல்கள் -
குடிமக்களின் உரிமைகள்(citizens charter ) என்கிற தலைப்பில் அரசாங்க இலாக்காக்களுக்கு சில கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.பொது மக்களோடு தொடர்புடைய ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்படும். அதில் ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க எவ்வளவு கால அவகாசம்தேவைப்படும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். (3 நாட்களோ, 5 நாட்களோ, 15 நாட்களோ, ஒரு மாதமோ எவ்வளவாக இருந்தாலும் சரி ) உதாரணமாக - பிறப்பு / இறப்பு சான்றிதழ் கொடுக்க, சாதிச் சான்றிதழ் கொடுக்க, திருமணப் பதிவு சான்றிதழ் பெற, அரசாங்க சலுகைகளைப் பெற, குடிநீர் இணைப்பு பெற, வீடு மற்றும் பம்ப் செட் மின் இணைப்பு பெற, புதிய வீடு கட்ட அனுமதி பெற, பாஸ்போர்ட் பெற, பத்திரங்கள் பதிவு செய்ய,நகல்கள், வில்லங்க சான்றிதழ்கள் பெற, ஓட்டுநர் உரிமம் பெற, முக்கியமாக ரேஷன் கார்டு பெற -இப்பொதெல்லாம் இந்த காரியங்களைநடத்திக்கொள்வதற்கு, சாதாரண பொது மக்கள் திரும்பதிரும்ப அலைக்கழிக்கப்படுகிறார்கள்.லேசில் காரியம் நடப்பதில்லை. சில விஷயங்களுக்கு – அதிகாரிகளே பணம் கேட்கிறார்கள். சில விஷயங்களுக்கு நாமாகவே கொடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு ரேஷன் கார்டு பெற ஒன்றரை வருடங்களாக அலைகிறார் என் வீட்டருகே வசிக்கும் ஒருவர். ஆறு மாதங்களாக பாஸ் போர்ட் அலுவலகம் பின்னால் அலையும் இன்னொருவரையும் பார்க்கிறேன். அவரவர்க்கு உரிய பிராவிடெண்ட் பண்ட் பணத்தையோ, பென்ஷனையோ பெறுவதற்கே ஒவ்வொருவர் படாத பாடு படுவதையும் பார்க்கிறேன். லோக்பால் வந்தால், இந்த மாதிரியான விஷயங்களுக்காக அலையவோ, லஞ்சம் கொடுக்கவோ, அதிகாரிகளைக் கெஞ்சவோ வேண்டியதில்லை. விண்ணப்பம் கொடுத்தவுடன், தேதி குறிப்பிட்டு, ரசீது கொடுப்பார்கள். குறித்த நாள் முடிந்தவுடன் -"ராஜா மாதிரி (!)" போய் வாங்கிக் கொள்ளலாம்.
கிடைக்கவில்லை என்றால் - காரியம் நடக்கவில்லை என்றால், புகார் மனு கொடுத்தால் – உடனடியாக நிவாரணம் கிடைப்பதுடன், தாமதத்திற்கு காரணமான அலுவலர் தண்டிக்கப்படுவார். நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து, நமக்குத் தேவையான பணிகளைச் செய்வதற்காகத்தான் அரசு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். நமக்காக வேலை செய்வது அவர்கள் கடமை. சகல மரியாதைகளுடன் - அதைப் பெறுவது நமது உரிமை. அவர்கள் நம் சம்பந்தப்பட்ட பணியைச் செய்வதற்காகத் தான் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் லஞ்சம் கேட்பதோ - நாம் கொடுப்பதோ - இரண்டுமே தேவை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்?
தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள் * நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது. * லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம். * புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். * காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. * லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும். * இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும். * இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர். * நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது. * புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை. * லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம் * அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும். * பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. * புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம். * லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும். * லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம். * தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். * லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது. * ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும். * ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ?
இது உண்மையாக நடைமுறையிலும் வந்தால் – இந்த நாடு எப்படி இருக்கும் ? ஊழலற்ற அரசும், சுயமரியாதையுடனும், பெருமையுடனும், வாழக்கூடிய ஒரு சமுதாயமும், உருவாகும்இத்தகைய நாள் வரும்போது தான் -நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக