ஆதரவாளர்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்?! (மாசு கட்டுப்பாடு வாரியம்)

     தூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை, தாவரவழி மருந்தூட்டம்  இந்த சொற்களை படித்ததும் கேட்டதும் உண்டா இவைகளைப் பற்றி அறியவில்லை என்றால் நீங்கள் இயற்கையை இந்த உலகத்தை மாசுபடுத்துகின்றீர்கள் என்று அர்த்தம். இவையெல்லாம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மாசுக்களை அகற்ற, கண்டறிய  பயன்படுத்தும் கருவிகளில் சிலவற்றின் பெயர்கள்.

தூசி மாசு சேகரிப்பான் 
                 தூசு சேகரிப்பு கட்டகம் (Dust collection systems); பை வீடுகள் (baghouses), சுழற் பாய்மப்பிரிப்பி (cyclone separator), நிலைமின் வீழ்படிவாக்கி (electrostatic precipitator) 


காற்று நச்சு வாயு கண்டறியும் கருவி

                 சுத்தப்படுத்தி (scrubber) ; தடு-தகடு தெளிப்பான் (Baffle spray scrubber), சுழற் தெளிப்பான் (Cyclonic spray scrubber), குறுவழி வெளிப்போக்கி (Ejector venturi scrubber), தெளிப்புக் கோபுரம் (Spray tower), ஈரச் சுத்தப்படுத்தி (Wet scrubber) 
                

                  கழிவுநீர்த் தரமேற்றம் (Sewage treatment);வண்டலாக்குதல் - முதல்நிலை தரமேற்றம் (Sedimentation), கழிவு உயிர்ம-பதனக்கலம் - இரண்டாம் நிலை தரமேற்றம் (Activated sludge biotreaters), காற்று கலந்த கடற்கரைக் காயல் (Aerated lagoons), ஆக்கப்பட்ட சதுப்புநிலங்கள் (Constructed wetlands) 

                 தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம் (Industrial wastewater treatment), எண்ணெய்-நீர் பிரிப்பி, உயிரிய வடிப்பி (Biofilter), கரைந்த காற்றுமிதப்பு முறை (Dissolved air flotation - DAF), கிளர்வுற்ற கரிமத் தரமேற்றம் (Powdered activated carbon treatment), நுண் வடித்தல் (Ultrafiltration) 

இதெல்லாம் என்னவென்று தெரிகின்றதா? சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பொறியாளர்கள் பயன்படுத்தும் சில உபகரணங்களின் பெயர்கள் தான்.

இதனை விதமான கருவிகள், ஆயிரக்கணக்கான அலுவலர்கள், வட்டம் , மாவட்டம்  தோறும் அலுவலகம், வாகனம் , அதற்கென்று ஒரு துறை, அதற்கு ஒரு மந்திரி,  இப்படி ஒரு துறைக்கு மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது. 

 சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஏன் ?
மன அழுத்தம், மூளை பாதிப்பு, காது செவிடாகுதல், ஆஸ்த்துமா, மனநலம் பாதிப்பு, சுவாச நோய், இருதய நோய், புற்று நோய், சைனஸ் போன்ற பல நோய்கள் மனிதனுக்கு காற்று, நீர், மண் மாசுவால் ஏற்படுகின்றன.

நீரில் கலக்கும் மாசுவின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 14000 பேர் இறப்பு நாள்தோறும் சுமார் 1000 குழந்தைகள் வயிற்றுப்போக்காலும் பாதிப்படைகின்றார்கள். காற்று மாசடைவதால் இந்தியர்கள் ஆண்டு தோறும் 5,27,700 பேர் பாதிப்படைவதாக புள்ளி விவரம் சொல்கின்றது. 

தோல் நோய்கள் இருதயக் கோளறு உள்ளிட்ட பலவகை நோய்கள் பதிப்புக்கு கரணம்  நீர் நிலம் காற்று மாசுபடுதலே என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. இத்தகைய பதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க மாசுக்கட்டுப்பட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

  எதுவெல்லாம் மாசுவாகும்?

காற்று நீர் மண் மாசடைதல், கதிரியக்கப் பாதிப்பு,ஒலிசார் மாசடைதல், ஒளிசார் மாசடைதல், வெப்பம்சார் மாசடைதல், காட்சி மாசடைதல் போன்ற அனைத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் கடமையும் உள்ள துறை தான்  தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்.

மண் மாசு என்றல் தொழிற்ச்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகள் மற்றும் நச்சுக்கள் கலப்பது வரை அனைத்தும் அடங்கும். ஒலிசார் மாசு என்றால் வாகனங்களின் ஒலி முதல் தெருக்களில் ஊர்வலங்களில் ஒலிப்பெருக்கி பயன்பாடுவரை அனைத்தும் அடங்கும். ஒளிசார் மாசடைதல் என்பது வாகனங்களில் பயன்படுத்தப் படும் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்கு முதல் வானியல் சார் குறுக்கீடு உள்ளிட்ட அனைத்து அதிகப்படியான ஒளியூட்டங்களும் அடங்கும். காட்சி மாசடைதல் என்பது சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், திறந்தவெளி குப்பைக் கிடங்குகள், திடக் கழிவுகள் போன்ற கவனச் சிதறல் செய்யும் அனைத்து காட்சிகளும் அடங்கும். வெப்பம் சார் மாசு என்றால் காடுகளை அழிப்பது, வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் . இவ்வகை மாசு பற்றிய ஆய்வு செய்தலும் புகார் மனுக்கள் மீது ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் கடமையாகும்.

 மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் அலட்சியமே புவி வெப்பமயமாதலும் காற்று நீர் நிலம் மாசடைவதும் அதன் காரணத்தால் புதிது புதிதாக மக்களுக்கு ஏற்படும் பலவித நோய்களுக்கும் ஆகும். இவர்களின் பணியை கண்காணிப்பதும் சமூக ஆர்வலர்களின் பொறுப்புமிக்க கடமையாகும்.
------------------------------------------------------------------------------------------------------------

நிலம் நீர் காற்று போன்றவற்றில் மாசு ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுக்கும் பணியைச் செய்வது தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம். ஒழுக்கமற்ற அரசு அலுவலர்களின் முறைகேடுகளின் காரணமாக மாசுக்கட்டுப்பாடு துறை ஊழல் துறை என்று சொல்லும் அளவுக்கு மோசமாகிவருவது அந்த துறைக்கு மட்டும் அல்ல எதிர்கால இந்திய மக்களுக்கும் மனிதகுலத்திர்க்கே  கேடு விளைவிக்கும்.

 இந்தியன் குரல் அமைப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இலஞ்சம் கொடுக்காமல் கல்விக் கடன் குடும்ப அட்டை முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு பயன்களை அரசின் திட்டங்களை இருந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள தகவல்உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மனுக்கள் எழுத பயிற்சி மற்றும் உதவி செய்கின்றது.

ஒவ்வொரு அரசு துறையில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மக்களின் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கின்றார்களா என்ற கண்காணிப்புப் பணியையும் செய்துவருகின்றது. அந்த வகையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரின் கடமை அவர்களின் அன்றாட பணிகளை ஆய்வு செய்துவருகின்றது அதன் வழியில் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் துறையின் அலுவலர்கள் தன் பணியை செய்தார்களா என்று கண்காணிக்கும் நடவடிக்கையில் நமக்கு கிடைக்கப் பெற்ற தகவல். பணக்காரனுக்கும் அதிகாரவர்கத்திர்க்கும் வளையும் சட்டம் ஒரு சாமானியனின் கூக்குரலுக்கு செவி மடுத்ததா?


மணிமுத்தாறில் கலக்கும் கழிவுகள் நாடு ஆற்றில் கொட்டப்படும் சாம்பல்கள்
மாசுக்கட்டுபாடு வாரியமா? மாசுபடுத்துபவர்களுக்கு பாதுகாப்பு வரியமா ?

மக்கள் சேவகர்களா முதலாளிகளின் விசுவாசிகளா ?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமத்தின் வழியாக மணிமுத்தாறு (மணி நதி ஆறு) தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரின்(எம்.சி.சம்பத்) மாவட்டமான கடலூர் மாவட்டம் வழியாக சென்று கடலில் கலக்கின்றது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவில் தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் நவீன அரிசிஆலை மற்றும் ஸ்ரீ செல்வமுருகன் அதிநவீன அரிசிஆலை ஆகிய இரண்டு ஆலைகளும் சாம்பல் உள்ளிட்ட  கழிவுகளை விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளின் ஜீவ நதியான மணிமுத்தாற்றில் கொட்டுகின்றன. ஆகவே அந்த ஆற்றை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபடுகின்றது. மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்படைகின்றது. கழிவு நீர் அருகில் உள்ள விளைநிலங்களில் விடப்படுகின்றது நிலம் நீர் காற்று என்று அனைத்தும் மாசுபடுகின்றது.
மணிமுத்தாற்றில்  மலைபோல் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல்

எனவே ஆலைகளின் மாசுபடுத்தலைத் தடுத்து நிறுத்துங்கள் மணிமுத்தாறு மற்றும் விவசாய விலை நிலங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று 26-6-2010 தேதியில் விழுப்புரம் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர், தலைவர் சென்னை மாசுக்கட்டுப்பாடு வாரியம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர் , தமிழக முதல்வர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் புகைப் படங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. மீண்டும் நினைவூட்டல் அனுப்பப்பட்டது. அப்போழுதும் ஆற்றில் சாம்பல் கொட்டுவது நிற்கவில்லை 

புகார் மனு மீது நடவடிக்கைஎடுக்கத் தவறினால் தகவல் சட்டம் பாயும்.

இந்நிலையில் தகவல் உரிமைச் சட்டம் மூலம் புகார் மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நடவடிக்கை எடுக்கத் தவறிய அலுவலர் பெயர் பதவி மற்றும் காலதாமதம் செய்யும் அலுவலர் மீது புகார் செய்ய வேண்டிய அலுவலர் விவரம் கேட்டு மனு செய்யப்பட்டது.
ஆலையின் அருகில் உள்ள விலை நிலத்தில் கழிவுநீர் கருகும் பயிர்

தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டதும் 15-07-2010  அன்று ஆய்வு செய்யப்பட்டு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள விலை நிலங்களில் விடப்படுவதைக் கண்டறிந்து அரிசிஆலையின் உரிமையாளருக்கு 22.7.2010 அன்று முகாந்தரம் கேட்கும் கடிதம்  அனுப்பப்பட்டதாகவும் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 12-8-2010 அன்று சுற்றுச் சூழல் பொறியாளர் மாசுக்கட்டுப்பாடு வாரியம் விழுப்புரம் அவர்களது கடிதம் வாயிலாக தெரிவித்தார்கள்.

அதன் பிறகும் நடவடிக்கை இல்லை சாம்பல் கொட்டுவதும் கழிவுநீர் கலப்பதும் நிற்கவில்லை. ஆகவே அந்த அரிசிஆலை பெற்ற மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி நகல் கேட்டோம். அனுமதி பெறவில்லை என்று 30-05-2011 அன்று உறுப்பினர் செயலர் தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு  வாரியம் சென்னை அவர்களது கடிதம் வாயிலாக தெரிவித்தார்கள். 
ஆலையின் அருகில் உள்ள விளைநிலங்கள் வழியாக ஆற்றுக்கு செல்லும் வழி சாம்பளாலும் கழிவு நீராலும் பாதிப்பு

அனுமதி பெறாமல் 1998 ஆம் ஆண்டுமுதல் இயங்கிவரும் ஸ்ரீ பாலமுருகன் நவீன அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு 10-10-2012 அன்று உறுப்பினர் செயலர் மாசுகட்டுப்பாடு வாரியம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டது.








மேற்ப்படி புகார்மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 6-12-12 அன்று தகவல் சட்டத்தில் மனு செய்யப்பட்டது. 1998 ஆம் ஆண்டுமுதல் 14 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கத்தவறிய  களப்பணியாளர் முதல் மாவட்ட மண்டல அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களின் பெயர் முகவரி பட்டியல் 18-01-13 அன்று  விழுப்புரம் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அவர்களின் ஒப்புதலுடன் அளித்தார்கள்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் முன்னிலையில் விசாரணை ஆணையர் அவர்கள் நாள் 23-01-2013 உத்தரவில் பத்தி 10 இல் "தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் சட்டம் பிரிவு 4 ஐ சரிவரக் கையாளவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும் அதே 10 வது பத்தியில் "மனுதாரர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்குகையில் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாய பொறுப்புள்ள நிறுவனம் பல ஆண்டுகளாக இதனைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பது சரியல்ல, கண்டிக்கத் தக்கது என்று ஆணையம் கருதுகிறது."

அதே உத்தரவின் 11 ஆம் பத்தியில் "பொது அதிகார அமைப்பு கடமை தவரியுள்ளதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்த ஆணையின் நகலினை உறுப்பினர் செயலர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சென்னை ,அவர்களுக்கு அனுப்ப இவ்வாணையப் பதிவாளர் பணிக்கப் படுகின்றார்" என்றும் உத்தரவிட்டு ஆணை வழங்கியது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வரிய தலைவர் அவர்கள் மாசுக்கட்டுப்பாடு அனுமதி பெறாத அரிசிஆலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு இட்டு  உதவிப் பொறியாளர் , தமிழ்நாடு மின்சார வாரியம், தேவபாண்டலம் விழுப்புரம் மாவட்டம் அவர்களுக்கு அனுப்பிய 23.07.2013 நாளிட்ட கடித நகல்
அனுப்பியுள்ளார்.

26.07.2013 அன்று அந்த அரிசி ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இத்துடன் நம் கடமை முடியவில்லை இதற்கு காரணமான கடமை தவறிய 24 அலுவலர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்கச் செய்யும் வரை நம் கண்காணிப்பு தொடரும்.

 தகவல் உரிமைச் சட்டம் தகவலுக்கு மட்டுமல்ல குற்றங்களைக் கண்டறியவும் யார் தவறு செய்தாலும் தண்டனை பெற்றுத் தர மக்களுக்கு கிடைத்த வலிமையான ஓர் ஆயுதம்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது தவறு அந்த ஆலையின் முதலாளியுடையது அல்ல தவறு செய்யத் தூண்டியதும் தவறு செய்ததும் அரசு அலுவலர்களே முதலிலேயே இதையெல்லாம் சரியாக செய்தால் தான் அனுமதி என்று சொல்லியிருந்தால் அதெல்லாம் அந்த ஆலை அதிபர் முன்னரே அனுமதி பெற்று முறையாக செயல்பட்டிருப்பார். ஆய்வு செய்த வாரிய அலுவலர்கள் வாரிய விதிமுறைகளை ஆய்வுக்கு சென்ற அன்றாவது ஆலை அதிபருக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி கண்டிப்புடன் செயல்படுத்தியிருந்தால் பதினான்கு ஆண்டுகள் முன்னரே சுற்றுச் சூழல் காக்கப்பட்டிருக்கும்.

 கடமை தவறிய ஒழுக்கமற்ற அலுவலர்கள் லாபம் அடைவதற்காக அந்த அரிசி ஆலை அதிபருக்கு தவறான வழிகாட்டுதல் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. இந்த அலுவலர்களின் மெத்தனப் போக்கால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்ப்பட்டுள்ளது.இந்த நிலையில் அந்த ஆளை அதிபர் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி ஊழல் ஒழிப்பு துறையிடம் புகார் செய்தால் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் தண்டனை பெறுவது உறுதி. பதினான்கு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கத் தவறிய அலுவலர்களால் அந்த ஆலை அதிபர் பெரும் பணம் செலவு செய்து இருப்பார்.  அதன் பின் இப்பொழுதும் தனது அலையை இயக்கமுடியாமல் நஷ்டம் அடைந்துள்ளார். அவர் நியாயமாக நேர்மையாக அனைத்து உரிமமும் பெற்றிருந்தாலும் இவ்வளவு இழப்பு வந்திருக்காது.

புகார் மனு செய்தவரின் வவிவசாய விளைநிலத்தில் கழிவுகள் விடபடுவது நிறுத்தப்பட்டுள்ளது. விலை நிலம் பாதிக்கப்பட்டதுடன் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆலை அதிபருக்கும் கால விரையமும் பண விரையமும் ஏற்படக் காரணமாக அரசு அலுவலர்கள் இருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.  இனியாவது அலுவலர்கள் கடமையை சரியாக செய்யவும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிடுமா ?

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழல் அலுவலர்களே! நீங்கள் செய்யும் தவறு மனித குலத்திர்க்கே வைக்கப்படும் வேட்டு என்பதை அறிவீர்களா? தவறு செய்தால் அந்தத் தவறுக்கான தண்டனை உண்டு இயற்கை அன்னை உங்களை மன்னிக்க மாட்டாள் ஆகவே இனியாவது திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்.

நோயற்ற வாழ்வு வாழ நம் சந்ததிகள் நலமுடன் வாழ சுகாதாரம் சுற்றுச்சூழல் பேணி காக்கவேண்டிய அரசு(மக்கள்) துறை சரியாக செயல்படுகின்றதா அலுவலர்கள் தம் கடமையைச் செய்கின்றார்களா என்று மக்களாட்சியின் எஜமானர்களாகிய மக்கள் தான் கண்காணிப்பு செய்யவேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டவும் குறைகளை சொல்லவும் விழிப்புணர்வு பெற்ற மக்கள் தயங்காமல் முன் வரவேண்டும். உங்களுக்கு வழிகாட்டி உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம்.
- இந்தியன் குரல்

2 கருத்துகள்:

srinivasan சொன்னது…

தொழில் தொடங்கும் முன் எல்லாம் சரியாக இருந்தால் தான் அனுமதி என்றால் முறையாக இருக்கும்.பின்பு தவறு என்றால் அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கவேண்டும் .

Unknown சொன்னது…

நாட்டின் தூய்மை மிக அவசியம்