ஆதரவாளர்கள்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

கூடங்குளம் -கதை கதையாம் காரணமாம்

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு வழியாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் தொடங்கிய திட்டம்,
நான் படித்து முடித்து, வேலைக்கு சென்று, பத்து வருடங்கள் வேலை பார்த்த பின்னர் தான் செயல்பாட்டுக்கு வருகிறது என்பது சிறிது நெருடலைத் தரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட தாமதத்திற்குக் காரணம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் பங்களிப்போடு அந்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. 80களின் கடைசியில் சோவியத் யுனியன் நிலைகுலைந்ததினால் ரஷ்யாவில் நிலவி வந்த அரசியல் நிலையாமைகளே, நீண்ட தாமதத்திற்கு காரணம். இல்லையென்றால் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்பாட்டுக்கு வந்து இருக்கும் என நம்புகிறேன்.

பொதுவாகவே நீண்ட தாமதங்கள் சமூகத்தில் விவாதக்களங்களை ஏற்படுத்தி, மக்களைத் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரித்துவிடும். அதற்கு கூடங்குளம் திட்டமும் விலக்கல்ல. இடிந்தகரையில் பல நாட்களாக / மாதங்களாக அணு உலைக்கு எதிராகப் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தினமலர் மற்றும் சில ஊடகங்கள், அப்துல் கலாம் மற்றும் பல அணு விஞ்ஞானிகள், அரசியல் கட்சிகள் அணு உலைக்கு ஆதரவாக கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இதில் எதை நம்புவது? சில மாதங்கள் அணு உலை மின்சாரத்தைப் பற்றி இணையத்தில் வாசித்தேன். அதைப் பற்றி நான் அறிந்தவற்றை எழுதுவதே இந்த பதிவு.

அணுஉலைகளைப் (Nuclear Reactor) பற்றிய அடிப்படை அறிவியல் 12ஆம் வகுப்பிலேயே டேவிட் சார் சொல்லி கொடுத்து படித்து இருக்கிறேன். இன்றும் அது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருக்கிறது. அதில் அணு உலைகள் மற்றும் அணு மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவியல் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அணு எரிப்பொருள் (Radioactive Fuel) இருக்கும் குழாய்களுக்குள் நியுட்ரான்களைச் (Neutron) செலுத்தினால், அணு எரிபொருள் பிளவு (Nuclear Fission) ஏற்படும். அணுப்பிளவின் போது வெளிவரும் அளப்பரிய ஆற்றலைக் (Energy) கொண்டு, நீரினைச் சூடேற்றி, அதிலிருந்து வரும் நீராவியை வைத்து, சுழலியின் (Turbine) சக்கரங்கள் / அலகுகளைச் (Blade)சுற்ற வைக்கப்படுகிறது. சுழலி ஒரு மின்னியற்றியுடன் (Electric Generator) இணைக்கப்பட்டுள்ளதால், சக்கரங்கள் / அலகுகள் சுற்ற ஆரம்பித்தவுடன், மின்காந்த தூண்டலின் மூலமாக (Electro magnetic Induction) மின்சாரம் உருவாகி, பக்கத்திலுள்ள மின் நிலையத்திற்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு தரப்படுகிறது.

அணு உலை மின்சாரம் தயாரிக்கும் முறை

மேற்சொன்ன வழிமுறையைக் கூர்ந்து கவனித்தால், சுழலியின் அலகுகள் சுற்ற ஆரம்பித்தவுடன், ஒரு காற்றாலை மின்சார நிலையத்திற்கும், அணுமின் நிலையத்திற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. காற்றாலை மின்சார நிலையத்தில் காற்றின் வேகம் அடிப்படையில் சுழலி சுற்ற ஆரம்பிக்கிறது. அணுமின் நிலையத்தில் அணு எரிபொருள் பிளவிலிருந்து வெளிவரும் ஆற்ற்லின் மூலமாக அலகுகள் சுற்ற ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு தொழில்நுட்பங்களும் ஒன்று தான். சுழலியின் அலகுகள் சுற்ற ஆரம்பிப்பதற்கு முன்னால் நடப்பவற்றில் தான் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். அதில் முக்கியமானவை மூன்று.

1) அணுக்கழிவுகள்:

அணுக்கழிவு என்பது மகாபாரதத்துத் துரியோதனனின் தொடை மாதிரி. துரியோதனனைக் கதாயுத்ததில் எங்கு அடித்தாலும் வலிக்காது. ஆனால் தொடையில் ஒரு அடி விழுந்தால் அவ்வளவு தான். தோல்வி உறுதியாகி விடும். அது போல், எவ்வளவோ சாதகமான கருத்துக்களை அணு மின்சாரத்திற்கு ஆதரவாக கூறினாலும்  அணுக்கழிவு என்ற ஒரே வார்த்தை போதும், அந்த அனைத்து சாதகங்களையும் தவிடு பொடியாக்கி விடும்.

காற்றாலையோ, புனல் மின் நிலையமோ கழிவு என்று எதையும் தருவதில்லை. அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் கழிவான கார்பன்டைஆக்சைடு (CO2) கேடு என்றாலும் உயிர் பறிக்கும் அளவுக்கு கேடில்லை. அதாவது உடனடி பாதிப்பு இல்லை. சுற்றுசூழலை மாசுபடுத்தி அண்டார்டிக்காவில் உள்ள பனிமலைகளை உருகச் செய்து கடல் மட்டத்தை அதிகரிப்பதில் மட்டுமே அதன் தாக்கம் உள்ளது. ஆனால் அணுஉலைகளில் வரும் கழிவு, அணு எரிபொருளின் மிச்சம். கதிரியக்க குணம் உடையது. அதாவது இந்த கழிவுகளை அணுமின் நிலையத்திற்கு வெளியே கொட்டினால் அதிலிருந்து வெளியே வரும் கதிரியக்கம் மக்களைப் பாதிக்கும். நோய்களை உண்டாக்கும். தலைமுறைகளைப் பாதிக்கும். எனவே அதனைப் கண்டிப்பாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது ஏதோ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான பிரச்சினை என்று எண்ண வேண்டாம். இது உலகத்திலுள்ள அனைத்து அணுமின் நிலையத்திற்கான பிரச்சினை. இந்த பிரச்சினையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா 1988ல் தினமணியில் எழுதிய கட்டுரையின் சுட்டி. சுஜாதா அப்துல் கலாமின் வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


பிரான்ஸ் நாடு தன் மின்சாரத் தேவையை 75% அணு மின்சாரம் மூலமாகத் தயாரிக்கிறது. அப்படியென்றால் அந்த நாட்டில் இந்த பிரச்சினை இல்லையா? இருக்கிறது. அந்நாட்டின் அரசிற்கும் அணுக்கழிவுகள் பற்றிய பயம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. கச்சா எண்ணெய் கிடையாது, நிலக்கரி (Coal) கிடையாது, வருடத்தில் பாதி பனிக்காலம் என்பதால் சூரிய ஒளி மற்றும் நீர் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியாது. எனவே அவர்களுக்கு பயம் இருந்தாலும் அணுஉலை மின்சாரத்தை நோக்கி சென்றனர். எதிர்பார்த்தபடியே மக்கள் அச்சம் காரணமாக போராட்டம் நடத்தினர். மக்களிடம் பேசி புரிய வைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் மக்களிடம் சமரசம் ஏற்பட்டது. மண்ணுக்கடியில் புதைக்கப்படும் அணுக்கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டது என்று ஞாபகம் வைக்கப்படும். என்றாவது மக்களுக்கு கதிரியக்க பாதிப்பு வராமல், அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை கண்டறியப்பட்டால், புதைக்கப்பட்ட அணுக்கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டு பதப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல், அணுக்கழிவு கதிர்வீச்சு வெளியிடாமல் செய்வதற்கான ஆராய்ச்சியையும் ஆரம்பித்து உள்ளது. ஆராய்ச்சி முடிந்து வழிமுறை கண்டுபிடிக்கும் வரை, அணுக்கழிவுகளைப் புதைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அங்கு மட்டுமே புதைக்கப்படுகிறது. இன்று வரை அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கதிர்வீச்சு வெளியிடாமல் செய்வதற்கான வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. பிரான்ஸ் அணு மின்சாரம் பற்றிய சுட்டி:


அமெரிக்காவும் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவில்லை. அமெரிக்கா தான் உலகத்திலேயே அணுஉலைகள் மூலமாக அதிகமாக மின்சாரம் தயாரிக்கிறது. எனவே அவர்களிடம் அளவுக்கு அதிகமாக அணுக்கழிவுகள் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இவ்வளவு காலமாக அமெரிக்கா அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திற்கு உள்ளேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அணுமின் நிலையம் நிறைந்து விட்டதால், அதை அணுமின் நிலையத்திற்கு வெளியே மண்ணுக்கடியில் புதைத்து வைக்க யோசனை செய்து வருகிறது. நான் இப்பொழுது வாழும் கலிபோர்னியா மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான நெவடாவில் உள்ள யுக்கா மலைப்பகுதியில் புதைக்கலாம் என்று அவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். அது தொடர்பான சுட்டிகள்:


பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைவு. அங்கு மனிதர்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளைப் பார்ப்பது எளிது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் நெவடா ஒரு வறண்டு போன மாநிலம். சில இடங்களில் மனித நடமாட்டமே மிகவும் குறைவு. அந்த மாநிலத்தில் மக்கள் நடமாட்டத்தைப் பெருக்கவே உலகின் மிகவும் பிரபலமான கேளிக்கை நகரமான "லாஸ் வேகாஸ்" பல கேசினோக்கள் உருவாக்கப்பட்டது என்று கூட ஒரு கதை உண்டு. நெவடா போன்ற மாநிலங்களில், மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் அணுக்கழிவுகளைப் புதைத்து வைத்தால் பல வருடங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது அவர்களின் எண்ணவோட்டம்.

அப்படியென்றால் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகள் அணுமின் நிலையங்கள் அமைக்காமல் தானே இருக்க வேண்டும். ஆனால், நம்மை விட மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, தற்சமயம் நம்மை விட அதிகமாக அணுமின் நிலையங்களை கட்டி வருகிறது. கீழே உள்ள சுட்டியைப் பார்க்கவும். 


அணுக்கழிவுகளைச் சீனா பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து, மீண்டும் அணுமின்சாரம் தயாரிக்க பயன்படுத்த போவதாக கீழே உள்ள சுட்டி கூறுகிறது. எனினும் மறுசுழற்சி செய்த பின்னரும், முழுவதுமாக அது பாதுகாப்பாகி விடவில்லை. அதில் ஒரு பகுதியை மண்ணுக்குள் புதைத்து தான் வைக்கப் போகிறார்கள், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மாதிரி.


சரி சீனா என்னவோ செய்து விட்டு போகட்டும். நம் நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அணுக்கழிவுகளைப் புதைப்பதற்கு இடங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. அமைச்சர் ஒருவர் தெரியாமல், பயன்படுத்தாத கோலார் தங்க வயல்களில் புதைக்கப் போகிறோம் என்று சொன்ன அடுத்த நாளே கர்நாடக சகோதரர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டார்கள். நம் நாட்டின் மக்கள் தொகை அப்படி... மக்கள் வாழவே இடப்பற்றாகுறை இருக்கும் போது, அணுக்கழிவுகளைப் புதைக்க இடம் தேடுவது கடினம் என்றுதான் நினைக்கிறேன். எனவே அணுமின் நிலையத்தின் உள்ளேயே தான் அணுக்கழிவுகளை வைத்து இருப்பார்கள். ஒரு சில வருடங்களுக்கு இந்த உத்தி சரிப்பட்டு வரும். அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

2. அணு எரிபொருள்:

கழிவு என்பதே எரிபொருள் இருந்தால் தானே வரும். நம் நாட்டில் அணு உலை இயங்குவதற்கான எரிபொருளான உரேனியம் இருக்கிறதா என்று யோசிக்கவே இல்லையே.. உலகில் உள்ள மொத்த உரேனியத்தில் 1.5% மட்டுமே இந்தியாவில் உள்ளது. எனவே அணு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் உரேனியத்தை முதலில் இறக்குமதி செய்ய வேண்டும்.

உரேனியம் என்ன உருளைக்கிழங்கா? தேவைப்படும் போது ஏற்றுமதி இறக்குமதி செய்ய? அது இருந்தால் அணு ஆயுதம் செய்து விடலாமே. எனவே ஏகப்பட்ட கெடுபிடிகள். உரேனியத்தை இறக்குமதி செய்ய உலக அணு சக்தி கழகத்திடம் (International Atomic Energy Agency) இருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. ஏனெனில் ஒப்புதல் பெறுவதற்கு முதற்தகுதியே அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Non-Proliferation Treaty) கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டு விட்டால் நியாயமாக அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. ஆனால் நாலா பக்கமும் எதிரிகளை வைத்துக் கொண்டு இந்தியா எப்படி ஆயுதம் தயாரிக்காமல் இருப்பது? அது முடியாது. எனவே இறக்குமதி செய்யப்படும் உரேனியத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம் மட்டுமே தயாரிப்போம் என்று உறுதி அளிக்க இந்தியா தயாராக இருந்தது. இந்த உறுதிமொழி உலக அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற வழிவகுக்கவில்லை. ஏனெனில் அதற்கு பல நாடுகளின் ஆதரவு தேவை. குறிப்பாக அமெரிக்காவின் தயவு தேவை. எனவே இந்தியா (மன்மோகன் சிங்) மற்றும் அமெரிக்கா (ஜார்ஜ் புஷ்) தங்களுக்கு உள்ளே ஒரு ஒப்பந்தம் (123 Agreement / Hyde Act) செய்து கொண்டனர். இந்தியாவின் அணுமின் நிலையங்கள் அனைத்தையும் உலக அணு சக்தி கழகம் கண்காணிப்பதற்கு இந்தியா ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான் சாராம்சம். இந்த ஒப்பந்தத்தின் வழியாக, இந்தியா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே, உரேனியம் இறக்குமதி செய்ய உலக அணு சக்தி கழகம் ஒப்பந்தம் அளித்தது. 123 Agreement / Hyde Act இன்னும் ஒரு முக்கிய கட்டுப்பாடும் உள்ளது. அது இந்தியா அணு ஆயுதங்கள் சோதனை செய்யகூடாது என்பது. நாளைக்கே வாஜ்பாய் ஆட்சியின் போது போக்ரானில் அணுகுண்டு வெடித்த மாதிரி ஒரு சோதனை நடத்தினால், அவ்வளவு தான் உரேனியம் இறக்குமதிக்கு தடை வந்துவிடும். அப்புறம் எல்லா அணுமின் நிலையங்களின் மீது செலவழிக்கப்பட்ட பணம் ஸ்வாகா!!! 

சரி இந்தியாவுக்கு இப்படி ஒரு அனுமதி வாங்கி கொடுப்பதால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? அவ்வளவு பாசமா இந்தியா மீது அமெரிக்காவுக்கு? கூடங்குளத்திற்கு எப்படி ரஷ்யாவிடம் இருந்து அணு உலைகள் வாங்கினோமோ, அது மாதிரி இனி இந்தியாவில் அமைய இருக்கும் அணுமின் நிலையங்களுக்கு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து அணு உலைகள் வாங்க வேண்டும். ஏனெனில் புதிதாக நிறைய அணு உலைகள் நிர்மாணிக்க அமெரிக்காவிடம் திட்டம் கிடையாது. அதனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு உதவினால், அவர்களுக்கு வியாபாரம் நடக்கும்.

இப்பொழுது நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்றால், அவர்கள் நாட்டில் எண்ணெய் வளம் கிடையாது, நிலக்கரி கிடையாது, பாதி வருடத்திற்கு சூரியன் கிடையாது, பனிக்காலத்தில் காற்று வீசாது. ஆனால் நம் நாட்டில் அப்படியா? வருடம் முழுவதுமாக பயன்படுத்த சூரிய ஒளி மற்றும் காற்று இருக்கிறது. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு பயன்படும் அளவுக்கு நிலக்கரி இருக்கிறது. அந்த நூறாண்டுகளுக்குள் சூரிய ஒளி மற்றும் காற்று வழியாக மின்சாரம் தயாரிப்பதில் ஆராய்ச்சிகள் நடத்தி, அந்த வழிமுறைகளின் மூலமாக மின்சாரம் சீக்கிரமாகவும் அதிகமாகவும் உற்பத்தி செய்வது எப்படி என்று கண்டுபிடித்து செயல்படுத்தினால் உலகமே நம் வழிக்கு வரும். இன்னொன்றும் சொல்ல வேண்டும். சீனா, அமெரிக்கா பார்த்து அணு உலை மின்சாரம் காப்பி அடிக்கும் நாம், காற்றாலை மின்சாரத்தில் சீனா மற்றும் அமெரிக்கா முன்னோடிகளாக இருந்து உலகில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த பிரச்சினையில்லாத தொழில்நுட்பத்தைத் தான் கடன் வாங்கினால் என்ன?

அது சரி, நமக்கு சாதி சண்டைகள் போடவும், கௌரவ கொலைகள் செய்யவும், அடுத்தவரின் காதல் உண்மையானதா நாடகமானதா என்று கண்டுபிடிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே சூரிய ஒளி மற்றும் காற்று வழியாக மின்சாரம் தயாரிப்பது??

3. விபத்து பயம்:

"அணுஉலைகள் மீதான பயம், நடந்து மட்டுமே பழக்கப்பட்டவர்கள் திடீரென விமானத்தில் பயணம் செய்வதற்கு பயப்படுவது போலானது. அதாவது, விமானம் பறக்கும் பொழுது கீழே விழுந்து விட்டால் என்று பயப்படுவர்கள், நடக்கும் போது வண்டி இடித்து விடும் என்று பயப்பட மாட்டார்கள். இரண்டு தடவை விமானம் ஏறி பயணித்து விட்டால், விமானம் பற்றிய பயம் போய்விடும். இது வெறும் பழக்கமில்லாததால் வரும் பயம்" என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இந்த பயம் பழக்கம் பற்றியது மட்டும் அல்ல. 

இன்றைய மின்சாரம் தயாரிக்கும் முறைகளான அனல், காற்று, நீர் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட்ட நாளன்று அந்த நிலையங்களுக்கு பக்கத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். இரண்டொரு வாரங்களில் நிலைமை கட்டுக்கு கொண்டுவரப்பட்டவுடன், எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம். 

ஆனால், அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு, அதிலிருந்து கதிர்வீச்சு வெளியாகி விட்டால், நிலையத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகள், உணவுப்பொருட்கள் அனைத்தும் கதிர்வீச்சுக்கு உள்ளாகி வருடங்களுக்கும் பயன்படுத்த முடியாமல் போய்விடும். மனிதர்கள் மீது கதிர்வீச்சு பாய்ந்து விட்டால், அது அவர்களது தலைமுறையையும் காலம் காலமாக பாதிக்கும். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, புகுஷிமாவில் நிலத்தடி நீர் முழுதும் கதிர்வீச்சுக்குள்ளாகி விட்டதினால் அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என்று வாசித்தேன். 1986 ஆம் வருடம் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபிலில் நடந்த விபத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை கீழே உள்ள சுட்டியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.


அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அணுமின் நிலையத்தில் உள்ள பல அடுக்கு கட்டுமானங்கள் விபத்து நடக்கும் வாய்ப்புகளைக் குறைத்துள்ளது என்று விவரித்துள்ளனர். அதையும் மீறி விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியானால் அதை கையாள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உத்திகள் மீது நம்பிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் இந்த நம்பிக்கைகள், விபத்தின் கோர முகம், மக்களுக்குள் உண்டாக்கும் பயத்தைப் போக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்திய அதிகாரிகள் மற்றும் அரசின் மீதான ஊழல் புகார்களும், நேர்மையற்ற நடத்தையும் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கை. அதற்கு வலு சேர்ப்பது போல, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்த ரஷ்ய நிறுவனம் மீது ஊழல் புகார்கள் எழுந்து, அதன் இயக்குனர் செர்ஜி ஷுடோவ் ரஷ்ய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். போபால் விஷவாயு தாக்குதல் போது அரசாங்க இயந்திரம் செயல்பட்ட விதமும், அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் மறக்க கூடியதா என்ன?


மேற்சொன்ன எதுவுமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை. அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றைக் கூறுவதினால் கூடங்குளம் திட்டத்திற்கு நான் எதிரானவன் என்று கிடையாது. 17,000 கோடி செலவழித்து விட்டு, ஒரு துளி மின்சாரம் கூடத் தயாரிக்காமல் மூடச் சொன்னால் அது யதார்த்தம் ஆகாது. ஆனால் இந்திய அரசு அணுமின்சாரம் தயாரிப்பதில் பிற நாடுகள் போல் வெளிப்படைத்தன்மை வேண்டும். அணுக்கழிவுகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லத் தான் வேண்டும். அதை விடுத்து "உனக்கு நான் ஏன் சொல்ல வேண்டும்? அப்துல் கலாமை விட உனக்கு தெரியுமா?"  என்றெல்லாம் கேட்க கூடாது. கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு, உண்மையாக ஒரு ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே ஒரு ஆய்வு செய்து ஒரு அறிக்கை இணையத்தில் இருக்கிறது. அது அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அணுக்கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று தெளிவாகச் சொல்லவில்லை. அதோடு முக்கால்வாசி படங்கள் தெளிவாக இல்லை. சில படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. சில செய்திகள் இந்திய அணு ஆராய்ச்சி கழக இணையத்தில் ஏற்கனவே இருந்தவை தான். நான் மேலே அணு உலை மின்சாரம் தயாரிக்கும் முறை என்ற பெயரில் ஒட்டியிருக்கும் படம் கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. அதே படம் அந்த அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. அணு உலை பற்றி பிரத்யேகமாக ஒரு படம் கூடவா அறிக்கைக்காக உருவாக்கியிருக்க கூடாது?


கடைசியாக இன்று வேண்டுமானால் அணு உலைகள் மூலமாக மிக வேகமாக, சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிப்பது போல் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில்  வரவிருக்கும் பின்விளைவுகளை இந்திய அணுசக்தி கழகம் சிந்திக்க வேண்டும். அணுசக்தியை விமர்சிப்பவர்கள் இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் முழுக்க இருக்கிறார்கள். எனவே அணு மின்சாரத்தை பற்றிய விமர்சனத்தை அப்படியே விட்டு விட முடியாது. அணு மின்சாரத்திலுள்ள குறைபாடுகளைப் புரிந்து கொண்டு, விமர்சனங்களில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காற்று மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அவற்றைக் கொண்டு மின்சார தன்னிறைவைப் பெறுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். பார்ப்போம்!!
thanks by 
   http://enathusindhanaigal.blogspot.in/2013/07/blog-post.html

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல ஆதாரணங்களுடன் விரிவான விளக்கம்... நன்றி...