ஆதரவாளர்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2013

மின் கட்டணம் மாதம் தோறும் உயரும்! பெட்ரோல், டீசல் விலையைப் போலவே


 பெட்ரோல், டீசல் விலையைப் போலவே, நிலக்கரியின் சந்தை விலைக்கு ஏற்ப மின்சாரத்தின் விலையும் மாதம்தோறும் உயரக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை

தமிழ்நாட்டில் மின்தடை குறித்த எதிர்ப்பு மக்களிடம் முன்பு இருந்த அளவு இப்போது இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகளின் எதிர்ப்புகளும் போராட்டங்களும்கூடக் குறைந்துவிட்டன. இதற்கு மூன்று காரணங்களைச் சொல்ல முடியும்.


தமிழகத்தில் புதிய மின்திட்டங்கள் சில செயல்படத் தொடங்கியுள்ளதும், மின்தடை நாள்தோறும் 4 மணி நேரமாகக் குறைந்திருப்பதும் முதல் காரணம்.
தமிழகத்தில் போதுமான மின்உற்பத்தி இல்லை என்பதையும், அரசியல் காரணங்களால் மத்திய தொகுப்பின் வழியாக வேறுமாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டுவரவும்கூட முடியவில்லை என்பதையும் தொழில்துறையினர் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டிருப்பது இரண்டாவது காரணம்.

மூன்றாவதாக, பெரும்பாலான வீடுகளில் ஒரு டி.வி., ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி ஆகியன இயங்கும் அளவுக்கு "இன்வெர்ட்டர்' போடப்பட்டுவிட்டது. டி.வி. நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்நாடகங்களைத் தடையில்லாமல் பார்ப்பதற்கு இந்த இன்வெர்ட்டர்கள் போதுமானவை. பொதுமக்களின் பரவலான எதிர்ப்பு வரைமுறையோ, முன்அறிவிப்போ இல்லாத மின்தடைக்குத்தானே தவிர, தமிழக மின்பற்றாக்குறை குறித்து அல்ல.

தமிழகத்தில் உள்ள 212 லட்சம் இணைப்புகளில், வீட்டு இணைப்பு 141 லட்சம், வணிக இணைப்பு 25 லட்சம், தொழிற்துறை இணைப்புகள் 5 லட்சம், விவசாய இணைப்புகள் 19 லட்சம். வீட்டு இணைப்புகளுக்குத் தேவைப்படும் மின்சாரம், தொழிற்துறையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மின்தடையை வாக்குவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தப்பட முடியாத நிலை தமிழகத்தில் உருவாக வேண்டுமானால், 141 லட்சம் இணைப்புகளுக்கும் தனிக் கம்பியில் மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது அவசியம். இதற்கு வழக்கமான மின்தொகுப்பைப் பயன்படுத்துவதோடு, கதிரொளி (சூரியசக்தி) மின்உற்பத்தியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசெல்லும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்

இப்போது தமிழக அரசு குறைந்தவிலையில் மின்சாரத்தை வழங்கி, நட்டத்தை மானியமாக ஈடுசெய்து வருகிறது. இவ்வாறு, மானியம் அளித்து கட்டணத்தைக் குறைத்து வைப்பதை மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் எதிர்ப்பதால், பெட்ரோல், டீசல் விலையைப் போலவே, நிலக்கரியின் சந்தை விலைக்கு ஏற்ப மின்சாரத்தின் விலையும் மாதம்தோறும் உயரக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. இதைப் புரிய வைத்தால் பொதுமக்களுக்கு நிச்சயமாக கதிரொளி மின்உற்பத்தியில் ஆர்வம் ஏற்படும்.
கதிரொளி மின்உற்பத்திக்கான சாதனங்கள் நிறுவுவதற்குச் செலவு அதிகம் என்பதால்தான், அதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். குறைந்த மின்கட்டணத்துக்காக மின்வாரியத்துக்கு அளிக்கும் மானியத்தை, கதிரொளி மின்உற்பத்தி சாதனங்ககளுக்கு அளிக்கலாம். இதனால் அரசுக்குப் புதிதாக கூடுதல் செலவு ஏற்படப்போவதில்லை.

கதிரொளி மின்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு முதலில் அறிவிப்புகள் செய்திருந்தபோதிலும், அவை செயல்வடிவம் பெறவில்லை. குறைந்தபட்சமாக அனைத்து அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் தெருவிளக்குகளை கதிரொளி மின்பயன்பாட்டில் செயல்படுபவையாக மாற்றியிருக்கலாம். ஆனால், இன்னும் அதற்கான செயல்திட்டத்தை நாம் தொடங்கவில்லை.

கதிரொளி மின்உற்பத்தியால் குஜராத் மாநிலம் 700 மெகாவாட் பெறுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெருமளவு கதிரொளி மின்உற்பத்தி செய்ய பெரும் பரப்பு தேவை என்பதோடு, இதைக் கம்பிகளில் கொண்டுசெல்லும்போது ஏற்படும் வழித்தட இழப்பு 20%க்கு அதிகமாக இருப்பதால், அந்தந்தப் பகுதிகளிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவதே சிறந்த பயன்தரும். ஒவ்வொரு நகருக்கும் வெளியே கதிரொளி மின்நிலையங்களை அரசு அமைத்து, சுற்றியுள்ள வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கச் செய்வது எளிது, பயனுள்ளது.

கதிரொளி மின்நிலையங்களை அமைக்க அமெரிக்காவின் எக்ஸிம் வங்கி, 6% வட்டியில் கடன் வழங்கவுள்ளது. இதில் ஒரேயொரு நிபந்தனை - கதிரொளி மின்நிலையங்களுக்கான சாதனங்களை அமெரிக்க நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான். இத்தகைய கடனுதவியைப் பெற்று, தமிழகத்தில் பரவலாக கதிரொளி மின்நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டால் அதில் தவறில்லை. அமெரிக்க நிறுவனங்கள் பல தமிழகத்தில் செயல்படும்போது நமது அத்தியாவசிய மின்தேவைக்கான கருவிகளை அமெரிக்காவிடமிருந்து பெறுவதில் என்ன தவறு?

அனல், புனல் மின்நிலையங்கள் மூலம் மாநிலத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 5,500 மெகாவாட் மட்டுமே. தனியார் மின்நிலையங்கள் மூலம் 2,000 மெகாவாட் கிடைக்கிறது. மத்திய தொகுப்பிலிருந்து 3,200 மெகாவாட் மின்சாரம் பெற்றும்கூட நமக்கு மேலும் 3,500 மெகாவாட் தேவையாக இருக்கிறது. தமிழகத்தின் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் அளவும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின்தேவை அளவும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது. காற்றாலைகள் மூலம் நிலையான மின்சாரம் கிடைத்த பாடில்லை.

தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் வெய்யிலுக்குக் குறைவே இல்லை என்பதால், கதிரொளி மின்நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்குவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கதிரொளி மின்உற்பத்திச் சாதனங்களுக்கு மானியம் அறிவித்து ஊக்கப்படுத்துவதும் அவசியம்.
கடைசியாக ஒரு யோசனை. திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியராக நியமித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளில் அந்தந்த மாவட்டத்தை மின்மிகு மாவட்டமாக மாற்றியாக வேண்டும் என்கிற சவாலுடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் என்ன? எந்தவித அரசியல் நிர்பந்தங்களும் தலையீடுகளும் இல்லாமல் தொடர்ந்து இரண்டு வருட வாய்ப்பளித்தால் சவாலை அவர்கள் சமாளித்துக் காட்டுவார்கள். காட்டாதவர்கள் திறமையற்றவர்கள் என்கிற முத்திரையுடன்தான் பணிக்காலம் முழுவதும் வலம் வருவார்கள்!
நன்றி; தினமணி 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் சொல்வது நடந்தாலும் நடக்கும்...

விளக்கங்களுக்கு நன்றி...

முடிவில் நீங்கள் சொல்வது போல் நடந்தால் கோடி புண்ணியம் உங்களுக்கு...

NSK சொன்னது…

பயனுள்ள பதிவு, மழை நீர் சேகரிப்பு திட்டம் மாதிரி இதையும் கட்டாயபடுத்தலாம், வீடுகளில் குறைந்த அளவேனும் மின்சாரம் உற்பத்தி செய்யகூடிய கதிரொளி சாதனங்கள் நிறுவ வேண்டும் என ஆணை பிறப்பிக்கலாம்.

அவன் செய்வான், இவன் செய்வான் என்றால் நம்ம ஊரில் நடக்காது, எல்லாரும் செய்யுங்கடா என்று அதிகாரமாக ஒருத்தரு சொன்னால் கண்டிப்பா செய்வாங்க...