ஆதரவாளர்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

காசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தேசிய அவமானம்

கடமையை செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதைமொழி. வாழ்க்கை நாடகத்தில் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடந்தாலே உரியது கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில், கடமையை செய்வதற்கே "லஞ்சம்' என்றாகி விட்டது. அரசு பதவி என்பது பணம் பண்ணுவதற்கே எனக்கருதி, "வாரிச் சுருட்டு'வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர் சில அதிகாரிகள். லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும் ஒருவரை, "தலையில் முக்காடு போட' வைத்தாலும், எக்கேடும் கெடாதவர்கள்போல இக்கலையில் வல்ல அரசு ஊழியர்கள், இன்னும் "கையேந்தி' காலம் தள்ளத்தான் செய்கின்றனர்.குறைந்த சம்பளம் பெறும் கீழ்நிலை ஊழியர்கள் முதல், அதிக சம்பளம் பெறும் மேல்நிலை அதிகாரிகளை வரை "லஞ்ச'ப்பேய் பிடித்து ஆட்டுகிறது. இதனால் அப்பாவிகள், சாமானியர்கள் வேலை நடக்காமல், விரக்தியடைகின்றனர். உணவுப் பொருளில் கலப்படம் செய்வது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்றால், லஞ்சம் பெறுவது "தன்னையே விற்பதற்கு' ஒப்பானது என்று அறிய வேண்டும்.

 முறைப்படி நடக்க வேண்டிய சமூகப் பணிகள், லஞ்ச அரக்கனால் முடக்கப்படும்போது, அது தொடர்ந்து பரவி, தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் லஞ்சத்தை தேசிய அவமானம் என்றுகூட சொல்லலாம். தனிமனித ஒழுக்கமும், அறநெறி கருத்துக்களும் தற்கால மனிதர்களிடம் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. பள்ளி, கல்லூரிகளில் லஞ்சப் பேய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால், வருங்கால சமூகம் இன்னும் வலுவிழந்து போகும்; வாழ்விழந்தும் போகும். இன்றைய இளைஞர் கூட்டம், லஞ்சத்தை அடியோடு வெறுக்கிறது. லஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் மனநிலை உருவாகி விட்டது.

லஞ்சம் வாங்கினால் ஏழு ஆண்டுகள் சிறை

ஆர்.காந்தி, ஐகோர்ட் வக்கீல்:ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனை சட்டத்தில் வழிசெய்யப்பட்டது. ஆனால் அதில் போதிய தண்டனை கிடைக்காததால், 1947ல் ஊழல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. பின் பல்வேறு புதிய திருத்தங்களுடன் தற்போது நடைமுறையிலுள்ள ஊழல் தடுப்பு சட்டம், 1988 முதல் அமல்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசின் பண உதவி பெற்று செயல்படும் அரசு சாரா அமைப்பு நிர்வாகிகளின் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியும். அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ, அல்லது பாதகம் செய்யவோ சட்டப்படியாக சம்பளம் அல்லாத ஒன்றை பெறுதல் அல்லது பெற ஒப்பு கொள்ளுதல் ஆகியவை பிரிவு 7ன் கீழ் குற்றம். குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 6 மாதங்களில் இருந்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அரசு ஊழியர் அல்லாத ஒருவர், அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்யவோ செய்ய விடாமல் தடுக்கவோ லஞ்சம் பணம் பெறுவதோ அல்லது பெற ஒப்பு கொள்வதோ பிரிவு 8 மற்றும் 9ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். இக்குற்றச் செயலுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அரசு ஊழியர் சார்பில் செயல்படும் தனிநபர்கள் இதன்படி தண்டிக்கப்படுவர். ஒரு தனிநபர் லஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் மீதும் பிரிவு 10 ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.அரசு ஊழியர் வருமானத்திற்கு அதிகம் சொத்து குவித்தல் போன்ற குற்றங்களுக்கு பிரிவு 13ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஊழல் மூலம் சேர்த்த சொத்தை கைப்பற்றவும், முடக்கவும், போலீசாருக்கு அதிகாரம் உண்டு.நம் நாட்டில் சேர்த்த லஞ்ச பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்தும், பிறகு அதை இந்தியாவிற்கு கொண்டு வருவோர் மீது பிரிவென்ஷன் ஆப் மணி லாண்டிங் ஆக்ட் 2002ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

கடந்த 2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஊழலுக்கு எதிரான சர்வதேச அறிக்கையில், 178 நாடுகளில் இந்தியா 87வது இடத்தை வகிக்கிறது.
காசு... பணம்... துட்டு... மணி... மணி...:

நாட்டில் எதில், எதிலோ தொழில்நுட்பம் உயர்ந்தாலும், பிச்சை எனும் லஞ்சம் பெறுவோர், திருந்தியபாடில்லை. சில லஞ்சவாதிகளின் செயல்களை கேட்டால், நீங்களே சிரித்துவிடுவீர்கள்..."வெள்ளை மனம் உள்ள மச்சான்...' என, வெள்ளை ஆடையில் வந்து நிற்பார், அந்த போலீஸ்காரர். வாகனத்தை கட்டுப்படுத்தி, மதுரையை காப்பாற்ற போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன்னைக் காப்பாற்ற தயாராகிக்கொண்டிருப்பார் அவர். "வண்டிக்கு ஆர்.சி., இருக்கா, இன்ஸ்சூரன்ஸ் இருக்கா... என, கேட்பதற்கு முன், பாக்கெட்டில் பணம் இருக்கா... என்பதை பார்வையிலேயே "ஸ்கேன்' செய்வார். எதுவுமே இல்லையென்றால், "யோவ் காலையிலிருந்து மாடா வெயில்ல நிற்குறோம்... நீ பகுமானமா வண்டில போற...' என, கடுப்பாவார். என்னமோ... இலவசத்துக்கு வேலை பாக்குறமாதிரி பேச்சு இருக்கும்."சார்... கரும்புச்சாறு குடிக்க கொண்டு வந்த ரூ.10 தான் இருக்கு...' என, வண்டிக்காரர் கூறினார், "இதெல்லாம் ரூபாயா... பிச்சைக்கார பயலே... குடுத்துட்டு போ...' என, அதையும் பறித்துக் கொள்ளும், அவரை என்னவென்று சொல்வது?அடுத்து மாநகராட்சி பக்கம் வந்தா, நாலு பேர் ஒன்னா வந்திடக்கூடாது, அவங்களை தேடி, ஒருத்தர் வருவார். "என்ன விஷயமா வந்துருக்கீங்க...' என, அவர் கேட்கும் தொனியை பார்த்தே, பெரிய ஆளு போல, என, மனுதாரர்கள் அசந்துவிடுவர். "அய்யாவை பார்த்து, மனு கொடுக்கணும்...' என, அவர்கள் பம்முவார்கள். "நீங்க நெனச்சதும் பார்க்குறதுக்கு அய்யா என்ன, ஆலமரமா... ; தேக்குமரம்டா... "காஸ்ட்லி' தெரியும்ல,' என, கட்டைக் கொடுப்பார், அந்த நபர். "நாங்க என்ன செய்யணும்...' என, அன்பு கோரிக்கை வைக்கும் அவர்களிடம், "நீங்க எதுவுமே செய்ய வேணாம்... கேட்குறதை கொடுத்துட்டு போங்க, நீங்க கேட்காதது கூட, உங்களைத் தேடி வரும்...' என, "டீலிங்' முடிந்துவிடும். அடுத்து பத்திரப்பதிவு... "என்னப்பா... இடம் வில்லங்கமா தெரியுதே...' கொஞ்சம் சரிபார்க்கணும் போலயே... என்றார், அந்த அதிகாரி. "சார், உங்க உதவியாளர் சரிபார்த்துட்டாரே...' என்பார், பதிவுக்கு வந்தவர். "ஓ... அவன் பார்த்துட்டானா... ஒரு நாளைக்கு பத்து, பதினஞ்சு பேரை பாக்குறோமா... அதான் மறந்து போயிருது... இருந்தாலும், வந்தது வந்துட்டீங்க, போகும் போது, இந்த நம்பருக்கு ரூ.500க்கு "ரீசார்ஜ்' செய்துடுங்க...' என, அன்பு கோரிக்கையுடன், பதிவு "ரெடி'.வருவாய்துறைக்கு வந்தால், "சார் முதியோர் உதவித்தொகை வாங்க என்ன பண்ணனும்?' என, மனுதாரர் கேட்டால், "நீ முதியவர் ஆகணும்,' என, மேதாவி பதில் வரும். அப்போதே புரிந்துகொள்ளலாம், இருப்பது தாலுகா அலுவலகத்தில் என்று. "சார்... ரொம்ப பாவபட்டவன், கொஞ்ச உதவி பண்ணுங்க...' என, வேண்டுதல், நீண்டு போகும். ""இங்கே பாரு... மாசத்துக்கு ரூ.1000 வெச்சாலும், வருஷத்துக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கும்; ஒரு மாச சம்பளத்தைக் கொடுத்துட்டு போ...' என, படித்தவர் என்பதை நிரூபிப்பார், அன்பர். இதுபோல், ஒவ்வொரு துறைக்கும் ஒரு "ஸ்டைல்' இருக்கிறது. இது மாறினால், நன்றாக இருக்கும் என்று ஆசை தான்! உங்களுக்கும் தானே..!
லஞ்சத்திற்கு எதிராக 25 ஆண்டுகள் போராட்டம்:

லஞ்சத்திற்கு எதிராக 25 ஆண்டுகளுக்கும்மேலாக போராடும், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இந்திய கம்யூ., கட்சி நிர்வாகி சுப்புக்காளை:லஞ்சத்திற்கு எதிராக போராடிய பல சம்பவங்களை குறிப்பிடலாம். 2005ல் திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சம்பவத்திற்கு தொடர்பில்லாத ஆசிரியர் ஒருவரின் பெயரை போலீசார் வழக்கில் சேர்த்துவிட்டனர். இதில், இருந்து பெயரை நீக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதை, அந்த ஆசிரியரின் மனைவி எங்களிடம் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்து, 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருமங்கலம் அரசு மருத்துவமனையில், பிரசவம் பார்க்க ஒரு பெண்ணிடம் நர்ஸ் ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பில் புகார் மற்றும் போராட்டம் நடத்தி, அந்த நர்ஸை இடமாற்றம் செய்தோம்.திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தில், 1985ல் திருட்டு வழக்கில் தொடர்புடைய 15 பேரை, இரண்டு ஆண்டுகளுக்குமுன் போலீசார் அழைத்து, உங்கள் செயல்பாடு குறித்து விசாரித்து, அதிகாரிகள் அறிக்கை கேட்கிறார்கள். நல்லபடியாக அறிக்கை கொடுக்க, ரூ. 20 ஆயிரம் கேட்டனர். லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தோம். மேலும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாக சென்று கேட்டபோது, ""நாங்கள் அப்படி கேட்கவில்லையே,'' என கூறி, அந்த 15 பேருக்கும் நல்லபடியாக அறிக்கை கொடுத்தனர்.லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தாலுகா, யூனியன், ஊராட்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது தொடர்பாக என்னிடம் பலர் புகார் கூறுகின்றனர். களத்தில் இறங்கி போராடுகிறேன். பொது விஷயத்திற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு நான் சென்றால், எனக்கு போலீஸ் டீ வாங்கி கொடுக்கிறது. இதுபோதும். மிரட்டல் வருகிறது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.லஞ்சத்திற்கு எதிராக என்னுடைய செயல்பாடு தொடரும். இவரை தொடர்புகொள்ள 90037 29482.
தனி மனித ஒழுக்கம் தேவை:

எஸ்.ஜாஹிர்ஹூசைன்(சுகாதார ஆய்வாளர், ஈரோடு மாநகராட்சி):லஞ்சத்திற்கு பொதுமக்களும் ஒரு காரணம். ஒரு பணியை உடனே செய்து தரகோருவது, காலம் முடிந்தபின் செய்து தரும்படி கோருவது, முழுமையான தகவலை மறைத்து தவறான தகவல் தருவது போன்றவையே லஞ்சத்திற்கு அடித்தளம். குறுக்கு வழியில், விரைந்து காரியம் முடிக்க நினைக்கும்போது லஞ்சத்திற்கான வழி அகலமாக திறக்கப்படுகிறது. சட்டத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தால் ஒழிக்க இயலும். எத்தனையோ பேர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் உள்ளனர், எத்தனை பேர் வேலையே இல்லாமல் வெட்டியாய் திரிகின்றனர், எனக்கு கிடைத்த இந்த பணி, எம் மக்களின் வியர்வை நீர் என எண்ணினால் யாருக்கும் லஞ்சம் வாங்கும் சிந்தை எழாது. லஞ்சம் வாங்குவோர், மேலதிகாரி நிர்ப்பந்தம் செய்வதாக கூறுகின்றனர். ஊழியர் நேர்மையானவராக இருந்தால், எந்த மேலதிகாரியும் அவரை நிர்ப்பந்திப்பதே இல்லை. சிலர் நான் நூறு ரூபாய்தானே வாங்கினேன். பெரிய அளவில் வாங்குவோர் பலர் உள்ளனரே என ஆறுதல் பெறுகின்றனர். இன்று ரூ. 100, நாளை ரூ.ஆயிரமாகும். பின் லட்சமாகும். எனவே லஞ்சம் வாங்க மாட்டேன் என அரசு ஊழியர்கள் உறுதி கொள்ள வேண்டும்.
லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்காதீர்


ஜான்சன் சுந்தரம், தலைவர், தமிழ்நாடு லஞ்ச, ஊழல் எதிர்ப்பு இயக்கம், மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில், 30 ஆண்டுகளாக பேராசிரியராக இருந்தேன். துணை முதல்வராக இருந்து ஓய்வு பெற்றேன். பணியில் இருக்கும்போது எனது மாணவர்கள் போலீஸ், ராணுவ உட்பட பல்வேறு வேலைக்கு சென்று முயற்சி செய்துவிட்டு ""சார் ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார். என்னால் கொடுக்க முடியாததால் வேலைக்கு போக முடியல,'' என பலர் சொல்லி கேட்டுள்ளேன். இது என்னை மிகவும் பாதித்தது. நாட்டை காக்கும் உன்னத பணிகளில்கூட, எப்படி ஒரு புரோக்கர் ஊடுருவ முடிந்தது? என, எனக்குள் கேள்வி எழுந்தது.இதனால், ஓய்வு பெற்ற பின், லஞ்சத்துக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்க முடிவு செய்து, 2005 ல், இந்த அமைப்பை துவங்கினேன். லஞ்சம் என்பதை ஒரு "இழிவான செயல்' என, அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து, இதுதொடர்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் என, பல இடங்களில் லஞ்சம் கேட்பதாக எங்கள் உறுப்பினர்கள் வந்து சொல்லும்போது, நாங்கள் அங்கு நேரடியாக சென்று அவர்களுக்காக பேசி, லஞ்சமில்லாமல் காரியத்தை செய்து முடிக்கிறோம். ஆனால், அரசியல் தொடர்பான ஊழல், லஞ்சம் மட்டும், எங்களுக்கு சவாலாக உள்ளது. லஞ்சத்துக்கு எதிராக வாய்கிழிய பேசும் பலர், பின்னால் சென்று, லஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துவிடுகின்றனர்; இதுவும் மாறவேண்டும்.
தினமலர் நாளிதழை படித்து போலீசில் புகார் செய்தேன்


குமார் , விருதுநகர்: நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு கட்டையாபுரத்தில் வீடு உள்ளது. அதற்கு வீட்டு வரி ரசீது கேட்டு, நகராட்சி வருவாய் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். அங்கு வருவாய் அலுவலர், உதவியாளர் ஆகியோர், உங்கள் வார்டு கவுன்சிலரை பார்த்து வாருங்கள், என்றனர். நான் யாரையும் பார்க்க முடியாது, என்ன வரி உள்ளதோ, அதை கட்ட தயாராக உள்ளேன் என்றேன். அதிகாரிகள் இரண்டு வாரமாக அலைய விட்டனர். பின்னர், 960 ரூபாய் வரி கட்ட, 4,000 ரூபாய் கேட்டனர். இதுபோன்றவர்கள் தண்டனை பெற்றால்தான்,லஞ்சம் என்பது, ஓரளாவாவது குறையும் என்பதை முடிவு செய்தேன். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், லஞ்சம் கேட்டால், புகார் செய்யலாம் என, ஒரு "போன் நம்பர்' இருந்தது. அதை வைத்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தேன். அதன்படி, வருவாய் அலுவலர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர். அரசின் கவனத்திற்கு, இது போன்ற தவறுகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதே,என்னுடைய நோக்கம்.
நிம்மதியாக தூங்கலாம்



ஷகிலா, துவக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், திருப்பூர்: ஆசை, ஆடம்பரமே லஞ்சம் வாங்க காரணி. பொதுமக்களின் வேலையை ஊழியர் நிறைவேற்றாமல் இருக்க முடியாது; கொஞ்சம் தாமதமாகலாம். அதை பொறுத்துக் கொண்டு, லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஊழியர்களுக்கு, அரசு போதுமான சம்பளம் வழங்குகிறது. சமீபத்தில் கூட, மத்திய அரசைப் போல அகவிலைப்படியை அறிவித்துள்ளது. எனவே சம்பளத்தை தவிர, மற்றதை எதிர்பார்க்கக் கூடாது. ஒரு வேலை முடிந்துவிட்டால், பொதுமக்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் தான், நம் பணியின் திருப்தி உள்ளது. இது ஊழியர்களுக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு. இவ்வாறு திருப்தி அடைந்தால், நாம் நெஞ்சை நிமிர்த்தி நடைபோடலாம்; நிம்மதியாக தூங்கலாம்.அவ்வாறின்றி, "லஞ்சம் பெறுகிறார்' என்ற நிலை ஏற்பட்டால், அது அவருக்கு மட்டுமின்றி, குடும்பத்திற்கே அவமானமாகிவிடும். அதன்பின் அவர், எவ்வளவு உண்மையாக உழைத்து உயர்ந்தாலும், யாரும் அதை உழைத்து சேர்த்தது என கருதமாட்டார்கள்.இன்று, நூறு ரூபாய் எதிர்பார்ப்பது, பின் ஆயிரமாகி, லட்சமாகி, நம்மை மட்டுமல்ல, நாட்டையே கடனாளியாக்கிவிடும். "லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற செய்தி "தினமலர்' நாளிதழில் வெளியாகி, 2 மாதங்களாகியும், என்னை இன்றும் சிலர் வாழ்த்தி வருகின்றனர். இது, பொதுமக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறதல்லவா? இந்த வாழ்த்துக்கள் கிடைத்தற்கரிய பேறு.
THANKS TO DINAMALAR

கருத்துகள் இல்லை: