ஆதரவாளர்கள்

Tuesday, September 16, 2014

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....


நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப் படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள் 10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக் கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure ) அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்.
வளாக வேலை வாய்ப்பின் முதல்நிலை ‘எழுத்துத் தேர்வு’ என்பது அனைத்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஓர் முதல்நிலை பகுதியாகும். ஆகவே மாணவ / மாணவியர்கள் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சில புத்தக கடைகளில் விற்கும் மூன்றாம் தர புத்தகங்களை வாங்கிப் படிக்கும் சமயம் உங்களுடைய திறமை தரம் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
பல நிறுவனங்கள் நடத்தும் தேர்வு முறையில் கேள்விகள் கீழ்கண்டவாறு வருகின்றன. அதே முறையில் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
+2 நிலை: பல நிறுவனங்கள் நடத்தும் கேள்வித் தாள்களை ஆராய்ந்து பார்க்கும் சமயம், சராசரியாக 20 மதிப்பெண்கள் +2 நிலையில் உள்ள வேதியியல், இயற்பியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் சார்ந்து உள்ளது. மாணவ / மாணவியர்கள் சற்றே வியப்புடன் பார்க்கலாம். நாங்கள் அனைவரும் பொறியியலின் நான்காம் வருடத்தில் படித்துக் கொண்டு இருக்கின்றோம்; இந்த நிலையில் +2 கேள்விகள் தேவையா என்ற அதிர்ச்சி தோன்றலாம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் (Item wise analysis) என்ற நிலைப்பாட்டில், இந்தியா முழுவதிலும் தேர்வு முறையைக் கண்காணித்துக் கொண்டும், அதில் கேட்கப்படும் கேள்விகளை ஆராய்ந்து, அதில் எத்தனை மாணவ / மாணவியர்கள் சரியான பதிலை எழுதுகின்றனர் என்று கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு அதிர்ச்சி தரும் உண்மைகள் பல வெளியாகின்றது.
+2 நிலைச்சார்ந்த வேதியியல், இயற்பியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்கும் சமயம் 73% சதவீத மாணவ / மாணவியர்கள் ‘0’ மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
என்று நாம் பார்க்கும் சமயம், நம்மை எல்லாம் அது அச்சுறுத்தும் உண்மையாகப் புலப்படுகின்றது. ஏன் இதை குறிப்பிட்டுக் காட்டுகின்றோம் என்றால், இதுப் போன்ற கேள்விகளுக்கு இவர்களுக்கு
விடைத் தெரியவில்லை என்று நாம் கருதி விடக் கூடாது. மாறாக படித்த பலத் தகவல்களை, கல்வி அறிவை, அடிப்படை அறிவை நாம் கவனத்தில் நிறுத்த மறந்து விடுகின்றோம். எந்த காரணத்தினாலும் அடிப்படைகளை மனதில் நிறுத்தாமல் மேலே சென்றால், அடித்தளம் என்றைக்கும், எப்பொழுதும் வலுவாக இருக்கும்.
வளாக வேலை வாய்ப்பு தேர்வு என்பது எப்பொழுதும் பல வியக்கத்தகு கேள்விகளை உருவாக்கும். புதிய புதிய சிந்தனைகளுக்கு வழி வகுக்கும். கேள்விகளை உருவாக்குபவர்கள் தங்களது அறிவு நிலையான உச்சத்தில் இருப்பவர்கள். மாணவ / மாணவியர்களே தரத்தில் தாழ்ந்த புத்தகங்களையோ அல்லது அனைவரும் பயன் படுத்தும் ஒரே மாதிரியான புத்தகங்களை படித்தோ, பயிற்சி என்ற பெயரில் ஒரு சில அவசர அறிவாளிகள் தரும் உண்மைக்கு புறம்பான தகவல்களையோ, செய்திகளையோ கேட்டு தோல்வியை தழுவி விடாதீர்கள்.
தயார் செய்து கொள்ளுங்கள்! மாணவ / மாணவியர்களே. ஒவ்வொரு தொகுதியிலும் கேட்கப்படும் கேள்விகளை சார்ந்து நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும். எவ்வாறு :
1. உங்களை அறிவுள்ள +2 பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மேற்கூறிய பாடத்தில் அவர்களுக்கு உதவுங்கள்: உதவும் நேரத்தில் நீங்களும் பலத் தகவல்களை மறக்காமல் இருக்க உதவும்.
2. கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களின் உதவியோடு நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் ‘வினாடி வினா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பல்வேறுச் செய்திகளை அன்றாடம் நினைவிற்கு கொண்டு வாருங்கள்.
3. பத்திரிக்கைகள், செய்தித் தாள்கள், ஊடகங்களில் வரும் தகவல்களை எல்லாம் தினசரிப் படித்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
4. தொலைக் காட்சிகள், ஒரு சில சேனல்களில் ஒளிப்பரப்படும் அறிவியல் துறைச் சார்ந்த 26 நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவியல் உண்மைகளை பல்வேறு பரிமானங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.
5. +2 தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் தேர்ந்து எடுத்து அதற்கு விடை எழுதி சரி பார்த்து. கொண்டே வாருங்கள்.
6. ‘அறிவியல் அறிவோம்’ போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.  இவ்வாறு நீங்கள் முயற்சி எடுக்கும் சமயம், அடிப்படையில் நீங்கள் மிக வலுவாக இருக்கின்றீர்கள் என்று பொருள்படும். மற்றவர்கள் எதை எல்லாம் சாதாரணம், எளிது என்று கருதுகின்றார்களோ அவைகள் தான் தேர்வு நேரத்தில் நம்மை கீழே தள்ளி விடும். நேர மேலாண்மை என்பது மிகமிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
பலர் இப்பகுதியில் 0 மதிப்பெண்கள் வாங்கும் சமயம், சரியான திட்டமிடுதலால் 20 மதிப்பெண்கள் வாங்கினால் வெற்றியின் முதல் படிக்கட்டு உனக்கு வசப்படும்.

No comments: