ஆதரவாளர்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

கங்காதரேசுவரருக்கு நண்பர் ஆனார் ஏகாம்பரேசுவரர்: தனி நபர் விளக்கத்தை காப்பி அடிக்கும் செயல்அலுவலர்கள்

'சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் போன்று, தங்கசாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரரும் தனி நபர்; அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க இயலாது' என, அந்த கோவிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்
.



கங்காதரேசுவரருக்கு முதல் பதில்:


தமிழகத்தில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரங்கள் கேட்டால் அதற்கு முறையான பதில் அளிக்காமல், அலைக்கழித்து வந்த அறநிலைய துறை அதிகாரிகள் தற்போது புதிய வழிமுறையை கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர்.முதலில், புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோவில் சொத்துகள் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர்.அதற்கு, 'கங்காதரேசுவரர் சட்டப்படி தனி நபர்; எனவே, அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது' என பதில் அளித்து, அக்கோவிலின் செயல் அலுவலர் அதிர்ச்சி அளித்தார்.

அதையடுத்து, சென்னை வள்ளலார் நகர், தங்க சாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலின் சொத்துகள் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ், சமீபத்தில் மனு செய்தார்.

ஏகாம்பரேசுவரரும் அப்படி தான்:


இதற்கு, அக்கோவிலின் செயல் அலுவலர் சித்ராதேவி, கடந்த, ஆக., 25ம் தேதியிட்ட கடிதம் வாயிலாக அளித்த பதில் விவரம்:கோவில் சொத்துகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல. அவை அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை; அவருக்கே சொந்தம். அவரே இந்த சொத்துகள் அனைத்துக்கும் சட்ட நபர் (தனி நபர்) ஆவார்.தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவிலின் அன்றாட நிர்வாக பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் அலுவலர், அறங்காவலர், இச்சொத்துகளை பராமரித்து, பாதுகாக்க மட்டுமே உரிமை கொண்டவர்கள்.எனவே, இத்திருக்கோவிலின் சொத்துகள் குறித்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை, தனிப்பட்ட நபர் குறித்து கேட்கப்பட்டதாகவே கருத வேண்டிஉள்ளது.அதனால், மனுதாரர் கேட்டுள்ள விவரங்கள், 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின், 8 (1) (ஜே) பிரிவின்படி விலக்களிக்கப்பட்ட தகவல்களாக கருதப்படுகின்றன. எனவே, மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்க இயலாது.இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வாசகம்:


கங்காதரேசுவரர் கோவில் செயல் அலுவலர் கடந்த, ஆக., 11ம் தேதியிட்ட கடிதத்தில் கொடுத்த பதிலில், 'மூலவர் குறித்து...' என்று, குறிப்பிட்ட வாசகங்கள், அச்சு மாறாமல் அப்படியே ஏகாம்பரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அளித்த கடிதத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துகள் குறித்த விவரங்களை கேட்போரை திசைதிருப்புவதற்காக, அறநிலைய துறை அதிகாரிகள், இப்படி வினோதமான பதில் அளிக்கின்றனரோ என, பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.செயல் அலுவலர்களின் இந்த போக்கை, அறநிலைய துறை நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: