தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா?
24/04/2008 Dr.M.K.Muruganandan ஆல்
“தினமும் சிறிதளவு மதுபானம் அருந்துவது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் தானே” எனக் கேட்டார் அவர்.
“ஆம் பல மருத்துவ ஆய்வுகள் அவ்வாறு தான் கூறுகின்றன” என நான் கூறியதும் அவரது முகம் அன்றலர்ந்த தாமரை போலப் பூரித்தது. அருகில் இருந்த அவரது மனைவியின் வார்த்தைகளோ நெருப்பில் விழுந்த உப்புப் போல படபடவெனச் சீறி வெடித்தது.
நீரிழிவு கொலஸ்ட்ரோல், பிரஸர் எல்லாம் கலந்து உழலும் அவரைக் குணமாக்க மனைவியும் கூடவே அலைந்து திரிகிறார். போதாக்குறையாக அவருக்கு மதுப்பழக்கமும் தாராளமாகவே உண்டு. எனவே, மனைவி கோபிப்பதில் நியாயம் உண்டுதானே?
அதேபோல அவர் பக்கமும் நியாயம் உண்டா?
தினசரி சிறிதளவு மதுபானம் எடுப்பதில் ஒரு சில நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அளவோடு மது அருந்துவது மாரடைப்பு , அஞ்சைனா போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியத்தை 30 முதல் 35 சதவீதம் குறைப்பதாக அவ் ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இரத்த நாளங்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதை (Antiatheosclerotic effect) தடுப்பதாலேயே இது சாத்தியமாகிறது.
நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் எச்டிஎல் (HDL) லின் செறிவை அதிகரிப்பதும் அழற்சியைத் தடுப்பதில் உதவுவதும் இன்சுலின் நிகர்த்த செயற்பாடும் மதுவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என நம்பப்படுகிறது. குறைந்தளவு மதுபானம் (1 or 2 drinks daily) தினமும் அருந்துபவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என மற்றொரு கள ஆய்வு சொல்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாக எடுத்த தரவுகளின்படி புதிதாத நீரிழிவு தோன்றுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள்.
நாளாந்த உடற்பயிற்சியானது இருதய நோய்கள் வராமல் தடுப்பதில் எவ்வாறு பங்களிக்கின்றதோ அவ்வாறே தினசரி குறைந்தளவு மது அருந்துவதும் நன்மையளிக்கின்றது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், மதுவின் அளவு அதிகமானால் பல்வேறு ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன என்பதையும் மறக்கக்கூடாது. அதிக மது அருந்துவதானது அந் நபருக்கு மாத்திரமன்றி அவர் வாழும் சமூகத்திற்கும் பாரிய பிரச்சினைகளை உருவாக்குகிறது.
வருடாந்தம் ஒரு இலட்சம் நபர்கள் அதீத மதுபாவனையால் வரும் நோய்களாலும் விபத்துகளாலும் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கிறார்கள். அங்கு தடுக்கக்கூடிய மரணங்களுக்கான மூன்றாவது முக்கிய காரணியாக மது இருக்கிறது. எனவே உலகமெங்கும் எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்களேன்.
வீதி, வாகன விபத்துகள் , பக்கவாதம் , இருதய துடிப்பு நோய்கள் , இருதய தசை நோய்கள், சடுதியான இருதய நிறுத்தம், ஈரல் சிதைவு, தூக்கத்தில் சுவாச நிறுத்தம்,மார்பு மற்றும் உணவுக்கால்வாய் புற்றுநோய்கள், தற்கொலை நாட்டம் போன்றவற்றிற்கு அதீத மது பாவனையே காரணம் என்பதை மருத்துவ உலகம் நீண்ட நாட்களாகவே அறிந்திருக்கிறது.
“இவை எல்லாம் கூடச் குடிச்சால் தானே வரும். அளவோடு பாவித்தால் பிரச்சினை இல்லைத்தானே” என அவர் கேட்டார்.
உண்மை தான் ஆனால் ,மாரடைப்பு , நீரிழிவு ஆகியவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புக் குறைந்த அளவு மதுவை தினசரி உபயோகித்தால் மட்டுமே கிட்டும் என்றே ஆய்வு கூறுகிறது.
மது என்பது பழக்கப்பட்டு மனிதனை அடிமைப்படுத்தும் பொருள். சிறிது சிறிதாக தினசரி உபயோகிக்கும் போது அதற்குப் பழக்கப்பட்டு அடிமையாகி படிப்படியாக உபயோகிக்கும் மதுவின் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மதுவின் அளவு கூடினால் மேற்படி நன்மைகள் கிட்டாது. அத்துடன் மதுவின் தீயவிளைவுகள் அனைத்தும் வந்து சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மது அருந்துவது என்பது செங்குத்தான வழுக்குப்பாறையில் வெறுங் கையால் பிடித்து ஏறுவதற்கு நிகரானது. சற்று கைப்பிடி தவறினாலும் அதல பாதாளத்தில் விழுந்து மரணத்தை அடைவது நிச்சயம். அத்தகைய சாகசத்தை விரும்புபவர்கள் மாத்திரம் மது அருந்தி மாரடைப்பு வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என விளக்கினேன்.
அன்றலர்ந்த தாமரையாகப் பூரித்த அவர் வதனம் கடும் வெயிலில் வாடி வதங்கியது போலாயிற்று.
more......... http://hainalama.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக