புதுடில்லி
: "லோக்பால் மசோதா தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த சம்பவம், நள்ளிரவில் நடத்தப்பட்ட நாடகம். பார்லிமென்ட் வரலாற்றில் இதற்கு முன், இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை' என, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா மீது, மெகா விவாதம் நடந்தது. நள்ளிரவைத் தாண்டியும் நீண்ட இந்த விவாதம், ஓட்டெடுப்பு இல்லாமல் முடிவடைந்தது. மத்திய அமைச்சர் நாராயணசாமி, விவாதத்துக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர், ஆவணங்களை கிழித்து எறிந்தார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக, ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், லோக்சபாவில் லோக்பால் மசோதா நிறைவேறியும், ராஜ்யசபாவில் நிறைவேறாமல் போனது.
இந்த சம்பவத்தை, அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், சட்ட நிபுணர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வி.என்.காரே கூறியதாவது:
நள்ளிரவு நாடகம்: லோக்பால் மசோதா தொடர்பாக ராஜ்யசபாவில் நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) நடந்த சம்பவம், நள்ளிரவில் நடத்தப்பட்ட நாடகம். பார்லிமென்ட் வரலாற்றில் இதற்கு முன், இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் பார்த்தேன். அங்கு நடந்த சம்பவங்கள், எனக்கு திகைப்பை ஏற்படுத்தின. நாட்டு நலனை யாரும் பொருட்படுத்தவில்லை. தங்கள் சுயநலத்துக்காகவே செயல்பட்டனர். கூட்டாட்சி முறை குறித்து, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதே நேரத்தில், லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தக் கூடாது என, மாநில அரசுகள் குரல் எழுப்புகின்றன. எடியூரப்பாவை போல சிறைக்கு போக, யாருக்கும் விருப்பம் இல்லை போல் இருக்கிறது. இவ்வாறு காரே கூறினார்.
அரசே பொறுப்பு: பிரபல சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யாப் கூறியதாவது: ராஜ்யசபாவில் நடந்த சம்பவம், இதற்கு முன் நடந்திராத ஒன்று. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. பார்லிமென்ட் ஜனநாயகத்தில், இந்த சம்பவம் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. நள்ளிரவைத் தாண்டியும், அதிகாலை வரை சபை அலுவல்கள் நடந்ததை, இதற்கு முன் பார்த்திருக்கிறேன். இந்த விஷயத்தில் பார்லிமென்டின் ஒப்புதல் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய அரசு என்பது, பார்லிமென்டுக்கு மேலானது அல்ல. ஜனாதிபதி ஒப்புதல் இன்றி, நள்ளிரவைத் தாண்டி, சபையை நடத்தக்கூடாது என, எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. ஒரு பயனற்ற காரியத்துக்காக, ஓட்டெடுப்பைத் தவிர்ப்பது சரியல்ல. இவ்வாறு காஷ்யாப் கூறினார்.
ஓட்டெடுப்பு அவசியம் இல்லை: சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான பி.பி.ராவ் கூறுகையில், "என்னை பொறுத்தவரை, ராஜ்யசபாவில் லோக்பால் மசோதாவுக்கு ஓட்டெடுப்பு அவசியம் இல்லை. திருத்தங்களை மட்டும், பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றியிருக்கலாம். இவற்றை லோக்சபாவின் ஆய்வுக்கு அனுப்பியிருக்கலாம். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை' என்றார்.
லோக்பால் மசோதா: இதுவரை நடந்தது என்ன? லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேறாமல் போனது இது முதல் முறையல்ல. கடந்த 40 ஆண்டுகளில், பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்த விவரம்:
* கடந்த 1968ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பார்லிமென்ட் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்பின், 1969ல் லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில் நிறைவேறுவதற்கு முன், லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் முடங்கியது.
* கடந்த 1971ல் மற்றொரு லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது லோக்சபா கலைக்கப்பட்டதை அடுத்து, மசோதா நிறைவேறவில்லை.
* இதன்பின், 1977ல் மீண்டும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரு சபைகளிலுமே, இந்த மசோதாவை, தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அப்போதும் லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை.
* கடந்த 1985ல் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த மசோதாவில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி, அரசே, இதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
* மீண்டும் 1989ல், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1991ல் லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறவில்லை.
* ஐக்கிய முன்னணி அரசு, 1996ல் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது. பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு மசோதா பரிந்துரை செய்யப்பட்டது. அதில் பல திருத்தங்கள் செய்யும்படி, நிலைக்குழு அறிக்கை அளித்தது. அறிக்கையை இறுதி செய்வதற்கு முன், லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறவில்லை.
* பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு 2001ல் மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பான இறுதி அறிக்கை தயாராவதற்கு முன், 2004ல் அரசு பதவி விலக நேரிட்டது.
* தற்போது லோக்சபாவில் நிறைவேறி, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக