ஆதரவாளர்கள்

சனி, 8 ஆகஸ்ட், 2015

மாற்று திறனாளிகளுக்கான அரசு வழங்கும் சலுகைகள் என்ன..? பெறுவது எப்படி..?

பேருந்தில்...
பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.
உதவியாளருக்கும் சலுகை விலையில் பயணச் சீட்டைப் பெற, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.நிரந்தரமானது.

ரயிலில்...
ரயில் பயணிகளில் முழுமையான பார்வையற்றவர்களும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் ஐம்பது சதவிகிதக் கட்டணத்தில் பயணம் செய்யலாம். முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று, அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.
கை, கால் குறைபாடு உள்ளவர்கள், தற்காலிக ஊனமுற்ற நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்யலாம். உதவியாளருக்கும் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள்,மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி, ஸ்கூட்டர் போன்றவற்றையும் அவர்கள் பயணம் செய்யும் ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
விமானத்தில்...
இந்தியாவின் உள்ளூர் விமானங்களில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் ஐம்பது சதவிகிதக் கட்டணத்தில் பயணம் செய்யலாம். எண்பது சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் ஊனத்தின் சதவிகிதமுள்ள கை-கால் இயக்கக் குறைபாடு உடையவர்கள் ஐம்பது சதவிகிதக் கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என்று இந்திய விமானப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பார்வையற்றோர், கை, கால் இயக்கக் குறைபாடு உடையவர்களுக்கும் ஐம்பது சதவிகிதக் கட்டணச் சலுகை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையைப் பெற, ஆதரவற்ற மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும். என்னால் எந்த வேலையையும் செய்ய இயலாது, ’என்னை வைத்துப் பராமரிக்க யாரும் இல்லை’ என்று சுய அறிவிக்கையுடன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரிடம் கையெழுத்துப் பெற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.
கல்வி உதவித்தொகை...
கல்வி உதவித் தொகையைப் பொருத்த வரையில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரையில் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பட்ட மேற்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு2,500 வரை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 1,000, 1,200, 1,500 என்று தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
இதர சலுகைகள்...
இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.
கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்பொழுது இத்திட்டம் சுயவேலை செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை,கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கே முன்னுரிமை. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
சுயமாகத் தொழில் துவங்கினால் 95 சதவிகிதம் கடனாகப் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் 5 சதவிகித முன் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். ஆனால் தற்பொழுது தமிழக அரசே அந்த முன்பணத்தை வங்கிக்குச் செலுத்தும்.
அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும்3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: