ஆதரவாளர்கள்

புதன், 1 பிப்ரவரி, 2012

மின் கட்டண உயர்வு குறித்த முதல் கருத்துக் கேட்பு கூட்டம், சென்னையில்




மின் கட்டண உயர்வு குறித்த முதல் 
கருத்துக் கேட்பு கூட்டம், சென்னையில் 
நேற்று துவங்கியது. இலவச மின்சார 
சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 
விவசாய சங்கத்தினர் ஆவேசத்தில், 
கூச்சல் போட்டு வாக்குவாதம் செய்தனர். 
காலை முதல் மாலை வரை, கூச்சல், குழப்பத்துடன், பரபரப்பாக கூட்டம் நடந்து 
முடிந்தது. மின் கட்டண உயர்வு குறித்து, 
பொது கருத்துக் கேட்பு முதல் கூட்டம், 
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று துவங்கியது. மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால் மற்றும் நாகல்சாமி தலைமையில், மின் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள், மின் ஊழியர் சங்கம், தொழிற்சாலை, வணிக நிறுவனப் பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் நுகர்வோர் சங்கத்தினர் உட்பட 84 பேர், கருத்துகளை பதிவு செய்தனர். 147 பேர் மனு கொடுத்தனர்; 500 பேருக்கு மேல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை; மின் திருட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சிக் கூட்டங்கள், வழிபாடு தல விழாக்களுக்கு, பகிரங்கமாக மின்சாரம் திருடப்படுகிறது. புகார் தெரிவித்தால் கூட, மின் வாரியம் அலட்சியமாகவே உள்ளது என, பலரும் தெரிவித்தனர். மின் வாரியத்திற்கு ஏன் நஷ்டம் ஏற்பட்டது; அதை சரி செய்ய, வாரியமும், ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்டணத்தை உயர்த்துவது நியாயமா? என, கேள்வி கேட்டனர்.

கூச்சல் : "இலவச மின்சார நஷ்டத்திற்கு மக்கள் பொறுப்பாக முடியாது. அந்த நஷ்டத்தை அரசு தான் கொடுக்க வேண்டும். நுகர்வோர் மீது அதிக சுமையை திணிக்கக் கூடாது. விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு, இலவச மின்சாரம் தருவதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. அந்த தொகையை முறையாக கணக்கிட்டு, அரசிடம் அதை மின் வாரியம் பெற வேண்டும்' என, கணபதி என்ற நுகர்வோர் பேசினார். அப்போது, விவசாயிகள் சங்கத்தினர் பலர் எழுந்து, அவரது பேச்சை எதிர்த்து, 
கூச்சலிட்டனர். ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, போலீசாரும், ஒழுங்கு முறை ஆணையத்தினரும், மின் வாரிய அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின், கூச்சலிட்டவர்களை அதிகாரிகள் எச்சரித்து, அமர வைத்தனர். அரங்கில் அவ்வப்போது எழுந்த எதிர்ப்புகளால், பலர் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு : அனைவருமே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாமென கேட்டுக் கொண்டனர். ஒழுங்கு முறை ஆணையத்தின் மீதும், மின் வாரிய அதிகாரிகள் மீதும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மின் வாரிய செயல்பாடுகளை, ஒழுங்கு முறை ஆணையம் சரியாகக் கண்காணிக்கவில்லை. மின்சார சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்தனர். மின் பிரச்னைகளை சரி செய்ய விதவிதமான பட்டியல் வைத்து, லஞ்சம் வசூலிப்பதாகவும், மின் வாரியம் ஊழலில் திளைத்துவிட்டது என்றும் காரசாரமாக குற்றஞ்சாட்டினர். குறிப்பிட்ட சில தனியார் நிறுவனத்திடம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால், அதிக நஷ்டம் ஏற்படுகிறது என, மின்சாரப் பொறியாளர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த காந்தி புகார் கூறினார். திருமுருகன் என்பவர், நேரடியாக ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு தெரிவித்ததால், "எங்களை அவமானப்படுத்த வேண்டாம் என, ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். 
இறுதியில், மின் வாரியத் தலைவர் ராஜிவ்ரஞ்சன் பதில் கூறினார். காலை முதல் மாலை வரை, கூச்சலும், குழப்பமும் தான் கூட்டத்தின் பிரதானமாக இருந்தது; கூச்சலில் துவங்கிய கூட்டம், மாலை 6.30 மணிக்கு பரபரப்புடன் முடிந்தது.

அக்கறையற்ற அரசியல் கட்சிகள் : கட்டண உயர்வு குறித்து, சாதாரண வியாபாரி முதல், பெரும் தொழிலதிபர்கள் வரை, கருத்து சொல்ல வந்திருந்தனர். ஆனால், கட்டணம் உயர்த்த வேண்டாமென அவ்வப்போது ஆர்ப்பரிக்கும், அரசியல் கட்சிகள் சார்பில் எந்த பிரதிநிதிகளும் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மட்டும், மின் ஊழியர் மத்திய அமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். அறிக்கைகள் விட்டு, அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள், அதிகாரப்பூர்வமாக கருத்துகளை கேட்கும் கூட்டத்துக்கு, தங்கள் பிரதிநிதிகளை அனுப்பாதது, நுகர்வோரை வருத்தமடையச் செய்துள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-


கருத்துகள் இல்லை: